எஸ்.கே.அருமைநாயகம் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 138 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-440-9.
வரலாற்றறிஞர் எஸ்.கே.அருமைநாயகம் (1939-1983) யாழ்ப்பாணம், ஏழாலையில் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சிரேஷ்ட வரிமதிப்பீட்டாளராகவும் பணியாற்றியவர். 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளில் கூடிய அக்கறை கொண்டிருந்த இவ்வறிஞரால் அவ்வப்போது எழுதப்பட்ட ஆக்கங்களை, அவரது மறைவின் 30 ஆண்டுகளின் பின்னர் தேடித் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் அதே ஊரவரான மு.கௌரிகாந்தன். இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். இந்நூலில் போர்த்துக்கீசரும் கோட்டை இராச்சியமும், வரலாற்று மாணவன் கண்ணில் குவெய்றோஸ், இலங்கையில் ஒல்லாந்தர் பின்பற்றிய சமயக் கொள்கை, கோல்புறூக்-கமரன் சீர்திருத்தங்கள், ஆங்கில அரசாங்கமும் சைவசமயக் கல்வியும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சி, தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சமூகச் சீர்திருத்தம் (1900-1957) சில அம்சங்கள், சுவாமி ஞானப்பிரகாசரும் வரலாற்று ஆராய்ச்சியும், ஆராய்ச்சி ஆர்வம் நிறைந்த அறிஞர் சபாபதிப்பிள்ளை துரைராஜசிங்கம், அநுராதபுரத்தில் இந்து சமயம்-தற்காலம், அநுராதபுரம் விவேகானந்த சபையின் தோற்றமும் வளர்ச்சியும், வரலாற்று விடை எழுதும் முறை, ஈழத்தமிழரின் நெற்செய்கை முறைகள் ஆகிய தலைப்புகளில் எஸ்.கே.அருமைநாயகம் அவர்களால் எழுதப்பட்ட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.