மலர்க்குழு. புங்குடுதீவு: இராஜராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: நிவாஸ் பதிப்பகம், சேர்.பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலி). 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. 1937ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை போர்ச் சூழல் காரணமாக 1991இல் மூடப்பட்டு பின்னர் மீண்டும் 2013இல் தீவகத்தின் கல்விச் செயற் பாட்டுக்காக மீளவும் புத்துயிர்ப்புடன் எழுந்தது. இப்பாடசாலையின் எண்பதாவது அகவையை நினைவுகூரும் வகையில் இம்மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையினர், சமூக அறிஞர்கள், சமயத் தலைவர்கள் போன்றோரின் வாழ்த்துரைகளுடன் கூடிய இம்மலரில், ஆசிரியர்கள், மாணவர்கள் அறிவுஜீவிகளின் படைப்பாக்கங்களும் பாடசாலையின் வரலாறு மற்றும் வளர்ச்சி பற்றிக் கூறும் அதிபர் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன. சிறுவர் உரிமைகளைப் பேணிக்காப்போம் (ஆசிரியை, திருமதி சா.கேதீஸ்வரன்), சிறந்த மனிதர்களை உருவாக்குவோம் (ஆசிரியர், சி.வின்சன்ராஜ்), வாசிப்பின் முக்கியத்துவமும் வாசிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும் (ஆசிரியை ச.தர்மலோஜினி), பாடசாலையின் அமுதவிழா வாழ்த்துப்பா (கண்ணகைபுரம் சைவ இளைஞர் சங்கம்), முன்பள்ளிக் கல்வியே வாழ்க்கையின் உரம் (முன்பள்ளி ஆசிரியை ஜெயக்குமார் இராஜேஸ்வரி) ஆகிய முக்கியமான பல ஆக்கங்களுடன் மாணவர்களின் ஆக்கங்களும் இம்மலரைச் சிறப்பிக்கின்றன.