வீ.பரந்தாமன். கிளிநொச்சி: பண்டிதர் வி.பரந்தாமன், கவின் கலைக் கல்லூரி, கனகபுரம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ்). 56 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 19.5×14.5 சமீ. உறவுமுறைச் சொற்கள் ஒருவரை விளிக்கவும் (அழைக்கவும்) ஒருவரின் உறவுமுறை குறித்துச் சுட்டவும், சுற்றத்தின் தொடர்பு அல்லது உறவுநிலை அல்லது தன்மை பற்றிக் குறிக்கவும் வழங்கப்படுகின்றன. ஒருவரை பெயர்கூறி அழைப்பது சமூகத்தில் மதிப்புக் குறைவாகக் கருதப்பட்ட ஒரு காலம் எம்மிடையே இருந்துள்ளது. இந்நூலில் செழுமைமிகு தமிழரின் குடும்ப உறவுமுறைச் சொற்கள் அனைத்தையும் ஒரு தனிநூலில் கண்டு வியக்க முடிகின்றது. தமிழர் கூட்டுக் குடும்ப வாழ்க்கையுடையராய் இருந்தமையால் அவரிடையே உறவுமுறைச் சொற்கள் மிகப் பலவாகப் பெருகியுள்ளன. ஏழு தலைமுறைக்குத் தொடர்ந்த உறவுமுறைச் சொற்கள் உள்ளன. அவ்வுறவுமுறைச் சொற்களைத் தொகுத்து பண்டிதர் அவர்கள் இவ்வகராதியை உருவாக்கியுள்ளார். யாழ்ப்பாண அகராதி, தமிழ்ப் பேரகராதி, கலாநிதி சுபதினி ரமேஷின் ஈழத்துத் தமிழ்ச் சிறப்புச் சொற்கள் ஆகிய நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றுடன் அவற்றில் பதிவுபெறாத புதிய சொற்களையும் சேர்த்து இத்தொகுப்பினை ஆசிரியர் மிகுந்த உழைப்பினை நல்கி உருவாக்கியுள்ளார். பெற்றோர் அவர் உடன் பிறப்புகள் ஆகியோர், அவரின் பிள்ளைகள், அப்பிள்ளைகளின் பிள்ளைகளிடையே வழிவழியாக வரும் உறவு அரத்த உறவாகும். ஏனைய உறவு மணத்தாலும் அன்பு, நட்பு ஆகிய பிறவாலும் வரும். ஒரு கொடி வழியில் (கோத்திரம்) வந்த உறவுமுறையினர் அரத்தவுறவினராகக் குறிப்பிடப்படுகின்றார். அடி, இனம், இனவழி, உரிமை, உறவு, கால்வழி, கான்முளை, கொடிவழி, கோத்திரம், சந்ததி, சரவடி, சுற்றம், சொந்தம், தலைமுறை, பரம்பரை, பரவணி, முறை, வமிசம், வழி ஆகிய இவையும் பிறவும் உறவுமுறைத் தொடர்ச்சியைக் குறிக்கும் பொதுச்சொற்களாகும். ஏழு தலைமுறைக்கு முறைப்பெயர்கள் வழங்கியிருந்தமையை இந்நூல்வழியாக நாம் காணமுடிகின்றது.