14629 நெஞ்சுறுத்தும் நிஜங்கள்: கவிதைத் தொகுப்பு.

வயலூரான் (இயற்பெயர்: செல்வராஜா சுதாகரன்). சாவகச்சேரி: செ.சுதாகரன், முத்துமாரி அம்மன் கோவில் வீதி, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-38036-0-3. பக்தி முதல் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் வரை பலதையும் இக்கவிதைகள் பதிவாக்கியுள்ளன. தான் வாழும் சமூகத்திலும், குறிப்பாக அலுவலகத்தில் கண்டும் கேட்டும் அறிந்ததும் அனுபவித்ததுமான சம்பவங்களின் பிரதிபலிப்பாக இக்கவிதைத் தொகுப்பு அமைகின்றன. பொருத்து வீடு முதல் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வரை அத்தனையும் எளிய தமிழில் அழகுக் கவிதைகளாக்கியுள்ளார். இறைவணக்கத்தை விநாயக வணக்கமாகத் தொடங்கி பொதுமக்களின் வாழ்வியல் தளங்களைத் தேடித் தனது கவிதைப் பயணத்தை இந்நூலில் தொடர்கின்றார். பொருத்து வீடு என்ற கவிதை பொருத்தமற்ற வீடமைப்புத் திட்டத்தை நொறுக்கித் தள்ளி கனல் கக்குகின்றது. இது தந்தை பாடும் தாலாட்டு என்ற கவிதை எதுகை மோனை சந்தம் சீர்தளையுடன் உன்னத கவிதை நடையுடன் அசைகின்றது. கவிஞர் அரசபணியின் நிமித்தம் வறியோருக்கான பொதுசன மாதாந்த உதவிப்பண மீளாய்வின்போது காசுக்காக மக்கள் சொல்லும் பொய்களை தத்ரூபமாகக் காட்டுகிறார். பிரதேச செயலகங்கள் கலை இலக்கியம் வளர்க்கச் செய்யும் பண்பாட்டுப் பெருவிழாவையும் பாடத் தயங்கவில்லை. மாறிடும் பண்பாடு, சுயதொழில், அங்காடிகளாகும் ஆலயங்கள், அடுத்தவர் சொத்து, கூடி விளையாடுவோம் எனக் கவிதைகள் வாழ்வின் நயங்களை நயம்படச் சொல்கின்றன. 1996இல் யாழ். மாவட்டச் செயலகத்தில் எழுதுநராகப் பணியில் சேர்ந்த சுதாகரன் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் வேளையில் இத்தொகுப்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்