10010 நானும் எந்தன் நூல்களும்: பாகம் 3.

ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, சீவன் பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, 2007. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6).

xlxxviii,  156 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21×13.5 சமீ.

ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் வகையில்  நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத்துறை சார்ந்தும், தமிழக, ஈழத்து, கனடா சார்ந்ததுமான பல்வேறு தகவல்களைத் தருகின்றன. ஈழத்துப்பூராடனார் தனது இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டார். தம் பெயரிலும், கதிர், கதிர்வள்ளிச்செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை,கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். ஈழத்துப்பூராடனார் பல நூல்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார். இவற்றுள் ஆங்கிலத்திலிருந்து புகழ்மிக்க கிரேக்க காவியங்களான இலியட், ஒடிசியை மொழிபெயர்த்தமை குறிப்பிடத்தக்கது. கோமரின் இலியட் காவியம் 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியம் 2400 விருத்தப்பவாகவும் படைக்கப்பட்டுள்ளன. மேலும் கிரேக்க நாடகங்கள் பல பன்னிரண்டு தொகுதிகளாகவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘சொபிக்கொலசின் நாடகங்கள்’ ‘அயிலசியசின் நாடகங்கள்’ குறிப்பிடத்தக்கவை. ஈழத்துப்பூராடனார் தமிழின் இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் பல நூல்களை இயற்றியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என இவர் எழுதியுள்ள நூல்களும் அறிக்கைகளும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். இவர் படைத்துள்ள தமிழ் எழுத்துகளின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல் (உரையுடன்), தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவைதானா?தமிழ் அச்சுக்கலையில் மின்கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம் என்பன தமிழுலகம் அறியத்தகும் நூல்களாகும். இவர் நாடகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். இவை உரையாகவும், செய்யுளாகவும் அமைகின்றன. மதங்கசூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார். இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்துகிடந்தன. இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப்பூராடனார் மதங்க சூளாமணியின் மறுபதிப்பாகவும், ஆய்வாகவும் கருதும்படி கூத்துநூல் விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். ஈழத்துப்பூராடனார் கூத்தர் வெண்பா (821 செய்யுள்), கூத்தர் அகவல், நாடகத்தமிழ், மணிமேகலை(தென்மோடி). சிலப்பதிகாரம் (வடமோடிக்கூத்து), கனடாக் குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவற்திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார். ஈழத்துப்பூராடனாரின் தமிழழகி காப்பியம்; ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு (1986) என்னும் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் சீமந்தனி புராணம் (வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம் (இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஈழத்துப்பூராடனார் ஏட்டுச் சுவடிகளாகவிருந்த சில நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் கபோத காதை (1970) இரண்ய சம்கார அம்மானை(1966) என்பன குறிப்பிடத்தக்கன. புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்டநூலையும், ஈழத்துப்போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். வறுமைப்போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத்தமிழ்(1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை(1984), புலவர்மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார். ஈழத்துப்பூராடனார் எழுதிய மட்டக்களப்பு குறித்த நூல்களில் மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி(1984), மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை(1984), நீரரர் நிகண்டு(1984), மட்டக்களப்புச் சொல்வெட்டு(1984), மட்டக்களப்புச் சொல்நூல்(1984), மட்டக்களப்பு மாநில உபகதைகள்(1982), சீவபுராணம் நெடுங்கதை(1979), மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள்(1978), மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள்(1980), மட்டக்களப்பியல், மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம், கன்னங்குடா உழுதொழிற்பள்ளு, மீன்பாடும் தேன்நாடு, வசந்தன்கூத்து ஒருநோக்கு, வயலும் வாரியும், மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை முதலியன குறிப்பிடத்தக்கன. இத்தகைய பரந்தவிரிந்த இவரது பன்னூல் வெளியீட்டுப் பகைப்புலத்தை விரிவாகப் பதிவுசெய்வதாக இம்மூன்று தொகுதிகளும் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41968).

ஏனைய பதிவுகள்