ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(8), 112 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-65-0.
இந்நூலிலே ஆசிரியர் தமிழ் அச்சுத் துறையினூடாகத் தமிழ் வரலாற்றை அணுக முற்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பெருந்தொகையான ஆவணங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அவற்றிலிருந்து பயனும் சுவையுமுடைய பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வழக்கமாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரே தமிழ் உரைநடையில் சந்தி பிரித்தெழுதுதல், தரிப்புக்குறிகளைப் பயன்படுத்தியமை ஆகிய இரண்டையும் தமிழ் உரைநடைக்கு அறிமுகம் செய்தார் என்று கூறுவது வழக்கம். ஆனால் இந்நூல் பிலிப் டி மெல்ஹொ (1723-1790) இவற்றை முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளதை சான்றுகளுடன் தருகின்றது. ‘ஈழத்தமிழராகிய பிலிப் டி மெல்ஹொ அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட (1759) தமிழ் உரைநடையில் சந்தி விகாரம் பிரித்து அச்சுப்பதிக்கும் முயற்சியானது வில்லியம் நெவின்ஸினால் ஆற்றுப்படுத்தப்பட்டு (1847) ஆறுமுக நாவலரால் முறையாகக் கையாளப்பட்டுள்ளது என்றே எதிர்காலத்தில் கூறுவது பொருத்தமாகும் என்று தனது கருத்தைப் பதிவுசெய்கின்றார். Philip De Melho கி.பி. 1744ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தில் பணிபுரிய அமர்த்தப்பட்ட செட்டி வம்சத்தைச் சேர்ந்தவர். கொழும்பு செமினரியில் கல்வி கற்றவர். தமிழ், ஹீப்று, கிரேக்கம், லத்தீன், டச்சு, போர்த்துக்கேயம் ஆகிய பல மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். ஒல்லாந்தரின் ஆட்சியின்கீழ் இவர் மொழிபெயர்த்த தமிழ் பைபிள் (புதிய ஏற்பாடு), 1759இல் கொழும்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூல் வெளியீட்டின் பின்னணியில் இவ்வாய்வு விரிந்துள்ளது. அறிமுகம், பைபிளுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள், முதலாவது சுதேச மொழிபெயர்ப்பாளரான பிலிப் டி மெல்ஹொ, தமிழ் உரைநடை வரலாற்றில் டி மெல்ஹொவின் வகிபாகம், தமிழில் வசன இலக்கியம், சந்தி விகாரங்களின்றி அச்சிற் பதித்தல், ஈழத்திற்குரிய சொற்கள், மெய் எழுத்துக்கள் புள்ளிபெறும், தரிப்புக் குறிகளும் குறியீட்டு இலக்கணமும், வரிவடிவ சீர்திருத்த முயற்சிகள், தமிழ் எழுத்துருவின் வடிவம், நிறைவாக ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஞானம் பதிப்பகத்தினரின் ‘ஈழமும் தமிழும்’ என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியிடப்பட்டுள்ள ஆவணநூல் இதுவாகும். 40ஆவது ஞானம் வெளியீடாக வெளிவந்துள்ளது.