மு.சு.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்). காரைநகர்: பவளவிழா மலர்க் குழு, மணிவாசகர் சபை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).
xxii, 246 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
அருளாசிகள், வாழ்த்துரைகள், வாழ்த்துப்பாக்கள், நடராஜர் துதி, மலராசிரியர் முன்னுரை, பவளவிழாக்காணும் மணிவாசகர் சபை பற்றிய செயலாளர் உரை, ஆகிய பொதுவான ஆரம்பப் பக்கங்களைத் தாண்டி இந்நூல் திருவாசகப் பகுதி, திருக்கோவையார் பகுதி, பொதுப் பகுதி, கடந்தகால நினைவுகள், காலச்சுவடுகள் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. திருவாசகப் பகுதியில் தித்திக்கும் திருவாசகச் சிறப்பு, திருவாசகச் சிறப்புக் கருத்துக்கள், திருவாசகம் பாடப்பெற்ற திருத்தலங்கள், மணிவாசகப் பெருமான் தம்மை நாயெனப் பாடிய பாடல் அடிகள், ஆகிய குறிப்புகளுடன் தமிழறிஞர்கள் திருவாசகம் சார்ந்து எழுதிய 20 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. திருக்கோவையார் பகுதியில் திருக்கோவையாரின் சிறப்பு, திருக்கோவையாரில் திருக்குறள் ஆகிய இரு கட்டுரைகள் உள்ளன. பொதுப் பகுதியில் மூவர் தமிழும் திருவாசகமும், திருவடிப் பெருமை, திருமுறைகளின் பெருமை, மலர் பறித்து இறைஞ்சி, இரு ராஜாக்கள், மேன்மைகொள் சைவநீதி, எடுத்தபொற் பாதம், விடுதலையும் வீடுபேறும் ஆகிய 8 தலைப்புகளில் தமிழறிஞர்களின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த கால நினைவுகளைத் தொடரும் காலச்சுவடுகள் என்ற பிரிவில் பொன்விழா மலர் வெளியீட்டின்போது சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியினால் நிகழ்த்தப்பட்ட தலைமையுரையும், மணிவாசகர் சபையில் பணியாற்றிய தலைவர்கள், செயலாளர்களின் பட்டியலும், மணிவாசகர் சபைக் கூட்டங்களில் தலைமை தாங்கியவர்கள், சொற்பொழிவாற்றியவர்களின் விபரங்கள், தங்கப் பதக்கம் வென்றோர் பட்டியல் ஆகிய வரலாற்றுத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.