கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான், வ.இன்பமோகன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா நினைவுக்குழு, 1வது பதிப்பு, ஆனி 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 216 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி இலங்கையின் குறிப்பிடத்தக்க மெய்யியலாளர்களுள் ஒருவராக வாழ்ந்து மறைந்த பேராசிரியர் சொ.கிருஷ்ணராஜாவின் மறைவின் இரண்டாவது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது துணைவியார் இராசலெட்சுமி கிருஷ்ணராஜா அவர்களின் முன்முயற்சியால் இந்த நினைவுமலர் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளைக் கொண்ட இம்மலரின் முதற்பகுதியில் பேராசிரியரின் வாழ்வும் பணிகளும் நினைவுகூரப்படுகின்றன. இதனை எம்.ஏ.நுஃமான், வி.பி.சிவநாதன், இராசலெட்சுமி கிருஷ்ணராஜா, தேன்மொழி பாசவதனி, ஆனந்தஸ்ரீபிரியா, கா.சிவத்தம்பி, எஸ்.வி.காசிநாதன், வ.இன்பமோகன் (நூல்விபரப்பட்டியல்) ஆகியோர் எழுதியுள்ளனர். இரண்டாவது பகுதியில் அவர் எழுதிய ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சக்தி பெண் தெய்வ வழிபாடு, இந்து மரபில் மெய்யியலும் மெய்யியற் சொல்லாடல்களும், சார்வாக மெய்யியல் ஒரு மீள்பார்வை, வரலாற்று நேர்வுகளுக்குப் பொருள்கொள்ளும் முறை, சோவியத் நினைவுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் எவையும் முன்னர் பிரசுரமாகாதவை. மூன்றாவது பகுதியில் அவரது நண்பர்களும் ஆய்வாளர்களும் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெறுகின்றன. சைவசித்தாந்தம்: ஒரு சமூக வரலாற்று நோக்கு (கா.சிவத்தம்பி), சோக்கிரட்டீஸ் நீதி விசாரணை: ஒரு சுருக்கப் பரிசீலனை (எம்.எஸ்.எம்.அனஸ்), டேவிட் ஹியூமின் காட்சிக் கொள்கை: ஒரு அறிமுகம் (வெ.அழகரெத்தினம்), இலங்கையில் சைவ சமயமும் பிற சமயங்களில் அதன் தாக்கமும் (நா.ஞானகுமாரன்), இந்துக் கணித வானியற் புலமை மரபில் இரண்டாம் பாஸ்கரரின் வகிபங்கு (ச.முகந்தன்), சினிமாவில் சர்ரியலிசம் (வடிவேல் இன்பமோகன்), புரட்டஸ்தாந்திய அறமும் முதலாளித்துவத்தின் தோற்றமும் (கந்தையா சண்முகலிங்கம்), சமூக மேம்பாட்டுக்கான ஊடக அறிவுக் கல்வி (என்.சண்முகலிங்கன்), அனர்த்தங்களால் ஏற்படும் உளநெருக்கீடுகளும் அகவடுக்களை ஆற்றுப்படுத்த வேண்டியதன் அவசியமும் (எஸ்.அமலநாதன்) ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.