சிங்கைச் செகராசசேகரன் (மூலம்), கா.செ.நடராசா (பொருள்), சி.பத்மநாதன்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
xlviii, 149 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.
கி.பி. 1270-1620 ஆண்டுக்காலங்களில் திருக்கோணேஸ்வரம் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் மேற்பார்வையில் திரிகோணமலைச் சிற்றரசர்களின் பாதுகாப்பிலிருந்து வந்தது. யாழ்ப்பாண மன்னனான ஜயவீர சிங்கை ஆரியன் (கி.பி.1380-1410) இக்கோவிலின் வரலாற்றை ‘தக்ஷிண கைலாயபுராணம்’ என்றபெயரில் தனது ஆஸ்தான கவிஞரைக்கொண்டு எழுதச்செய்தான். இன்றுவரை இந்நூல் திருக்கோணேஸ்வரத்தின் தலபுராணமாக விளங்கி வருகிறது. தலவரலாற்றுடன், அப்பிரதேசத்தின் சமூக பண்பாட்டு வரலாற்றுத் தகவல்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக்கூறுகின்றது. 1887இல் வித்துவான் கா.சிவசிதம்பர ஐயரவர்கள் காரைநகரில் இதன் மூலப்பதிப்பை வெளியிட்டதாக க.வைத்தீஸ்வரக் குருக்கள் குறிப்பிட்டுள்ளார். தக்ஷிண கைலாயபுராணத்தின் முதல் ஐந்து சருக்கங்களையும் உள்ளடக்கியதான முதலாம் பாகம் ஏற்கெனவே வெளிவந்திருந்த நிலையில் தருசனாமுத்திச் சருக்கம், திருநகரச் சருக்கம் ஆகிய பின்னைய இரு சருக்கங்களுடனும் பதிப்பாசிரியர் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய திருக்கோணமலையிற் சோழ இலங்கேஸ்வரன், திருக்கோணேஸ்வரத்திற் சோடகங்கள் ஆகிய இரு சிறப்புக் கட்டுரைகளுடனும் இவ்விரண்டாம் பகுதி வெளிவந்துள்ளது. இந்நூல் இ.சி.இரகுநாதையர் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் 1942இல் வெளிவந்துள்ளது. (முதலாம் பாகத்திற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2967)