தெ.பத்தினாதன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600005: பிவீஆர் பிரின்ட்ஸ்).
94 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-68-4.
ஈழத்திலிருந்து தமிழகம் வந்து சேர்ந்து அகதிகளாக முகாம்களில் வாடும் ஈழத்தமிழர் பற்றித் தமிழகம் அதிக அக்கறை கொள்வதில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாகும். அவர்களின் வாழ்நிலை, அரசதிகாரம் அவர்களை வழிநடத்தும் விதம், சலுகைகள் என்று சொல்லப்படுபவை, அவர்கள் செல்லும் வழிகள் எப்போதும் கண்காணிப்புக்காளாகுதல் என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் தமிழகத்தின் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விடயங்களைத் தகவல்களாகவும், அனுபவமாகவும் இந்நூலில் பத்தினாதன் முன்வைத்துள்ளார். பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இதுவாகும். இலங்கையில் மன்னார் மாவட்டம், அடம்பன் தாழ்வு என்னும் சிற்றூரில் பிறந்தவர் பத்தினாதன். 1990இல் தனது 16ஆவது வயதில் தமிழகத்துக்கு அகதியாக வந்துசேர்ந்தவர். 8 ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதி முகாமில் இருந்தவர். பின்னர் சென்னைக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்துறையில் இளங்கலைமானியாகக் கல்விகற்றவர். கால்நூற்றாண்டாகத் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் குறித்துத் தொடர்ந்தும் பதிவுசெய்து வருகிறார். இவரது முதல் நூல் ’போரின் மறுபக்கம்’ 2010இல் வெளிவந்தது.