எஸ்.விஜேசந்திரன், இரா.ரமேஷ். டிக்கோயா: தோட்ட சமூக தோழமைத்துவம் (Estate Community Solidarity), கிறிஸ்ட் சேர்ச், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxi, 194 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-589-177-6.
தோட்ட சமூகத்தின் அபிவிருத்தியில் பொதுச்சேவை வழங்கல் என்பது ஒரு முக்கிய கூறாகும். பொதுச் சேவை வழங்கலில் அரச இயந்திரம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்நூல் பெருந்தோட்ட மக்கள் உள்ளுராட்சி அமைப்புகளின் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளைப் பரிசீலனை செய்கின்றது. பிரதேச சபைகள் பெருந்தோட்ட மக்களுக்குத் தமது பொதுச் சேவைகளை வழங்குவதில் காட்டும் பாரபட்சம் மற்றும் எதிர்நோக்கும் சட்டரீதியான, நிறுவனரீதியான, மற்றும் நிதி சார்ந்த நடைமுறைத் தடைகள், பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பனவற்றை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்கின்றது. அத்தோடு, மேற்குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும் சவால்களை எதிர்கொள்வதற்கான பொறிமுறைகளையும் விதந்துரைக்கின்றது. அறிமுகம், பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள், அதிகாரப் பன்முகப்படுத்தலும் உள்ளுராட்சி அரசாங்க முறைமையும், இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளின் தோற்றமும் அவற்றின் தொழிற்பாடுகளும், உள்ளுராட்சி முறைமைக்கான சீர்திருத்தங்களும் பெருந்தோட்ட மக்களும், பொதுச் சேவைக்கான மனித உரிமை பொறிமுறைகளும் பெருந்தோட்ட மக்கள்மீதான உரிமை மீறல்களும், பொதுச் சேவை வழங்கலில் பெருந்தோட்ட மக்கள் மீதான புறக்கணிப்பும் சட்டரீதியான தடைகளும், விடய ஆய்வும் நடைமுறை அனுபவங்களும், உள்ளுராட்சி முறையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பரிந்துரைகள், முடிவுரை ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எஸ்.விஜேசந்திரன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல்துறையின் முதுநிலை விரிவுரையாளராவார். இரா.ரமேஷ் அதே பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளராவார்.