ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்), சி.தாக்ஷாயணி. யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், 501/2, காலி வீதி).
(6), 46 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14.5 சமீ.
பாரத்வாஜ பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மா அவர்கள் தனது துணைவியார் இசைக்கலைமணி ஸ்ரீமதி தாக்ஷாயணி சிவானந்தசர்மா அவர்களுடன் இணைந்து எழுதியுள்ள நூல். அவரது துணைவியாரின் (4.10.1956-21.5.1998) மறைவினையொட்டி அவரது ஞாபகார்த்த வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இரு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகின்றது. ஒன்று, விவாஹக் கிரியைகள் பற்றிய விளக்கங்களைத் தருவது. மற்றொன்று, விவாஹ வைபவத்தின் அங்கமாக அமையும் ஊஞ்சல் முதலிய சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் பாடல்களை முன்வைப்பது. வைதீக பாரம்பரியம் சார்ந்த விவாஹ அடிப்படைகளும் ஒழுங்குமுறைகளும் தத்துவங்களும் சில முக்கிய மந்திரங்களின் பொருள்களும் தெளிவுபடுத்தப்படுகின்றன. பிற்பகுதியில் கல்யாணப்பாடல்கள் இடம்பெறுகின்றன. கல்யாணத்தின்போது ஊஞ்சல், நலுங்கு முதலிய நிகழ்ச்சிகளின் பாடப்படும் பாடல்கள் இவை. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளால் ராமபிரானின் திருமணக் காட்சியை மனக்கண்ணால் தரிசித்துப் பாடப்பெற்ற தெலுங்கு உருப்படிகளையும், மரபுரீதியில் பாடப்பெற்றுவரும் சில பாடல்களையும் இந்நூலில் தொகுத்திருக்கின்றார்.