த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
viii, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 955-98551-8-2.
தேர்ந்தெடுக்கப்பட்ட பழமொழிகள் நமக்கு எத்தகைய வாழ்வியல் பாடத்தைப் புகட்டுகின்றன என்பதை இனிய தமிழில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் எடுத்துரைக்கிறார். பழமொழிகள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. ‘அகல உழுவதைவிட ஆழ உழு’ என்ற பழமொழியை சமகாலக் கல்விமுறையுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார். ‘ஆல் பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் இங்க’ என்ற பழமொழியை தற்காலத்தில் சுயநலத்திற்காக கட்சிமாறும் பச்சோந்தி அரசியல்வாதிகளை உதாரணமாக்கி விளக்குகிறார். ‘ஈயாதவன் செல்வம் இரப்பவன் செல்வமாகும்’ என்ற பழமொழிக்கு நாலடியாரின் ‘எனது என்றிருக்கும் ஏழைப்பொருளை…’ என்ற பாடலை உதாரணமாக்கி விளக்குகி;னறார். இப்படியாக ஒவ்வொரு பழமொழிக்கும் தகுந்த விளக்கங்களை இந்நூல் வழங்குகின்றது. குறுகிய வாக்கிய அமைப்பில் தேர்ந்த சொற்களைக் கொண்ட பழமொழிகள் அழுத்தமான கனமான செய்திகளையும் ஆழமான பொருட்களையும் கொண்டவை. இந்நூலில் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற பழமொழியில் தொடங்கி தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற பழமொழி ஈறாக இத்தகைய 100 தமிழ்ப் பழமொழிகளுக்கு தனித்தனி அத்தியாயங்களில் விளக்கம் தந்துள்ளார். நூலாசிரியர் சிறுவர் இலக்கியத் துறையில் சாகித்திய விருது பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50043).