செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
lii, 433 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-454-6.
மிகவும் விரிந்து பரந்த ஆங்கில மொழியின் வளர்ச்சி பற்றிய வரலாற்று நூல். வழக்கறிஞர் செ.சிறீக்கந்தராஜா இலங்கையில் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றித் தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்கிறார். லண்டனில் வித்துவான் வேலன் இலக்கிய வட்டம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தமிழ்ப்பணி செய்துவருகின்றார். கம்பன் இராமாயணத்தை இயற்றிய 12ஆம் நூற்றாண்டுக் காலத்தில் உலகின் ஒரு மூலையில் உருவெடுக்கத் தொடங்கிய ஆங்கில மொழி, எழுநூறு ஆண்டு காலத்துக்குள் எதிர்ப்புகளை எடுத்தெறிந்துவிட்டு வளர்ந்த வியப்புக்குரிய வளர்ச்சி, இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இன்று சர்வதேச மொழியாகப் பரிணமிக்கும் ஆங்கில மொழியின் வளர்ச்சி, தாழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்பனவற்றைப்புரிந்துகொள்ள, அம்மொழியை வளர்த்தெடுத்த பிரித்தானியாவின் வரலாறு பற்றிய பின்புல அறிவும் அவசியம் என்பதால், நூலின் முதலாம் இயலில் பிரித்தானிய வரலாறு சொல்லப்படுகின்றது. அந்த வரலாற்றைப் பின்னணியாக வைத்து, ஆங்கில மொழியின் பிறப்பையும் வளர்ப்பையும், புறக்கணிப்பையும் மீட்டெடுப்பையும் மெருகூட்டலையும் காட்டுகின்ற வகையில் பிரித்தானியாவின் மொழியியல் வரலாறு இரண்டாம் பாகமாக விரிகின்றது.