10355 அமிர்தசாகர பதார்த்த சூடாமணியும் வைத்தியத் தெளிவும் (அனுபந்தத்துடன்).

ஏழாலை ஐ.பொன்னையாபிள்ளை (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை:  மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2000. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாண அரசு).

xvii, 161 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:21.5×14 சமீ.

கிடைத்தற்கரிய நுல்களை மீள்பதிப்புச் செய்யும் பணியின் ஓரங்கமாக பிரபவ வருடம் (1928) ஆனிமாதத்தில் ஏழாலை ஐ.பொன்னையாபிள்ளை அவர்களால் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சாக்கம் செய்யப்பெற்ற நூலின் மீள்பதிப்பு இதுவாகும். இதன் மூலநூல்கள் ‘பதார்த்த சூடாமணி’, ‘வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகரம்’ ஆகிய இரண்டுமாகும். அமிர்தசாகரம்  நாடிகளின் தோற்றம், தொழில் ஆகியவற்றையும், சுரவகை, அவற்றின் குணம், சிகிச்சை முதலியவற்றையும், சூரணம், மாத்திரை வகைகளையும், மூலப் பவுந்திரம், கட்டு, புண், பற்பேத்தை, செங்கரப்பன், கபாலம், கயரோகம், நீரிழிவு, சன்னி வெட்டை, சூலை முதலாம் பல கொடு நோய்களின் தன்மைகளையும் அவற்றிற்குரிய மருந்து, நெய், எண்ணெய், தைல வகைகளையும் சிறப்பாகக் கூறுகின்றது. பதார்த்த சூடாமணியானது, உடம்போடு இயைந்து பயன்தரும் இயற்கைப் பொருட்களின் குணங்களை நன்கு விளக்குவது. நல்லன தீயனவற்றைப் பகுத்தக் காட்டுகின்றது. பஞ்சபூதங்களின் குணங்களையும், உணவுக்குரிய சோற்று வகை, சிற்றுண்டிவகை, புன்செய் தானியவகை, கீரை வகை, வேர், பூ, காய்களின் உணவுப்பயன்பாடு போன்ற இன்னோரன்ன விடயங்களை பதிவுசெய்கின்றது. இவை இரண்டும் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இருபாலைச்செட்டியாரவர்களால் தொகுக்கப்பெற்றதாக 1928இல் வெளிவந்த நூலில் குறிப்புள்ளது. இருபாலைச் செட்டியாரவர்களின் இயற்பெயர் தெரியாதபோதிலும், மீசாலையில் பிறந்து இருபாலையில் நீண்டகாலம் வாழ்ந்த பெரியாரெனவும், அவர் வேளாண் செட்டி வம்சத்தைச் சேர்ந்தவரென்றும் பின்னாளில் துறவுவாழ்வை வாழ்ந்தவர் என்றும்  குறிப்பிடப்படுகின்றது. இவர் பற்றி யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலிலும் குறிப்புள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 161209).     

ஏனைய பதிவுகள்