வடிவேல் இன்பமோகன். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, இல.7, ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).
viii, 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ.
1992முதல் தொடர்ச்சியாக நூல்வெளியீட்டுப்பணியில் ஈடுபட்டுவரும் விபுலம் வெளியீட்டகத்தின் மற்றுமொரு வெளியீடு இதுவாகும். நூலாசிரியர் வ.இன்பமோகன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் 1992இல் சேர்ந்து கல்வி பயின்றவர். இந்திய கலை இரசனை பற்றிய இவ்வாய்வு பொதுவாக கலை, இரசனை பற்றி அறியவிரும்பும் ஆர்வலர்களுக்கும், நுணகலையை ஒரு பாடமாகப் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பயனுள்ளவகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘கலைஞனின் நோக்கு நிலை’ என்ற முதலாம் இயலில் இந்திய மரபில் கலைஞன், கலையுருவாக்கத்தில் ஷடங்கக் கொள்கை, கலையுருவாக்க நூல்கள், சிற்பங்களுக்கான பிரமாணத்தை வரையறுத்தல், ரூபத்தை மனதில் பதித்தல், சிற்பத்தை அழகுபடுத்தல், பாவத்தை வெளிப்படுத்தும் முறை, படைப்பின் ஒத்த தன்மை, ஊடகமும் வரைதல் உத்தி முறையும் ஆகிய விடயங்கள்ஆராயப்பட்டுள்ளன. ‘சுவைஞனின் நோக்கு நிலை’ என்ற இரண்டாம் இயலில் இந்திய மரபில் கலையனுபவம் பற்றிய கருத்தியலாளர்கள், ரசக்கொள்கை, த்வனிக் கொள்கை, ஒளசித்யக் கொள்கை, இந்திய மரபில் சிற்பத்தை இரசித்தல், சிற்பரத்தினம் கூறும் சிற்பங்களை இரசித்தல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இறுதி இயலான ‘கலையாக்கமும் கலைரசனையும்’ என்ற பகுதியில், கலைச்செயற்பாட்டில் நியமங்களை அழுத்திக் கூறும் கலைமரபு, நியமங்களைப் பாதுகாப்பது பிரமாணமே, கலைக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவுநிலை, கலைச் செயற்பாட்டில் அழகியற் கொள்கைகளின் பங்கு, கலையனுபவம் வெளிப்படுவதில் கலைகளுக்கு இடையேயான வேறுபாடு, கலைரசனையும் கலை மொழியும், கலையனுபவத்தின் இறுதிநிலை ஆகிய தலைப்புகளில் விடயங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக தாலமான அட்டவணை, விளக்கப்படங்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.