ஷெல்லிதாசன் (இயற்பெயர்: கனகரத்தினம்). மட்டக்களப்பு: மகுடம் வெளியீடு, இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2015. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
xviii, 42 பக்கம், வண்ணஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52563-1-5.
திருக்கோணமலை மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய ஷெல்லிதாசன் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் இரு காரணங்களுக்காகக் கவனிக்கப்படவேண்டியவர். அவர் முற்போக்குக் கவிஞர் குழாத்தினருள் ஒருவராகவும், ஈழத்து மெல்லிசைப் பாடலாசிரியருள் ஒருவராகவும் விளங்குகின்றார். 34 சிறுவர் பாடல்கள் அடங்கிய தொகுப்பு இது. சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் பாடல்கள் பலவற்றை இத்தொகுதியில் காணமுடிகின்றது. ஒரு சிறுவனின் ஆளுமை விருத்திக்குத் தேவையான குடும்பப் பிணைப்பும் பொறுப்பும், நல்ல பழக்க வழக்கங்கள், படிப்பில் கவனம், அன்னை மீதானஅன்பு, நல்லுணர்வு, ஜீவராசிகளின் மீதான அன்பும் கரிசனையும், பகுத்தறிவுச் சிந்தனை, உடலுழைப்பு, கல்வி, நற்பண்பு, சுகாதார பழக்க வழக்கங்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை, விளையாட்டு மனிதநேயம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, தாய்மொழிப் பற்று, பெற்றோரை மதித்தல், பெற்றோர் மீதான பாசம், பெற்றோருக்கு உதவுதல், வாசிப்பின் அவசியம் என்பன போன்ற விடயங்களையெல்லாம் அறிவூட்டற் பாணியில் அழகிய கவிதைகளாக இந்நூலில் அள்ளி வழங்கியிருக்கிறார். இவரது பாடல்களில் கூறப்படும் கருத்தக்கள் சிறுவர்களால் அகநிலை நின்று கூறப்படுவது போல அமைந்திருப்பது சிறப்பு. பிரச்சினை வாடை, போதனை போன்றவையின்றி பாடல்களைத் தந்துள்ளார் ஆசிரியர். இப்பாடல்கள் யாவும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. கவிஞர் எளிய மொழிநடையில் உவமான உவமேயங்களைச் சிறப்பாகக் கையாண்டு வலுவான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி அவற்றுக்கான தீர்வுகளையும் தமது படைப்புக்கள் மூலம் வெளிக்கொணரும் வல்லமை கொண்டவராக நூலாசிரியர் காணப்படுகின்றார்.