மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6 : கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (கொழும்பு 13: றெயின்போ அச்சகம், 231, ஆட்டுப்பட்டித் தெரு).
(6), 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 20., அளவு: 24.5×18.5 சமீ.
பௌத்த ஜாதகக் கதைகள் சிலவற்றின் தமிழ் வடிவம். பாளி மொழியில் புத்தரது முற்பிறப்பு அவதாரக் கதைகள் பிரபல்யமானவை. அவை சாதகக் கதைகள் அல்லது ஜாதகக் கதைகள் என்ற பெயரில் வழங்கிவந்துள்ளன. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் உள்ள அக்கதைகளில் தேர்ந்த பத்துக் கதைகளை ஆசிரியர் இந்நூலில் தொகுத்திருக்கிறார். பாசாங்கு, வயது சென்றவர்க்கு மரியாதை, எங்கே அந்த இரத்தினக்கல், நன்றிக்கடன், ஒற்றுமையின்மையின் தீமை, பேராசை பெருநட்டம், ஒற்றுமையின் பலம், குசசாதகக் கதை, சுருங்கை வழி, கீழ்ப்படிவின் அறம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் விலங்குகளைப் பாத்திரங்களாகக் கொண்ட இக்கதைகளின் வழியாக சிறுவர்களின் மொழிவளத்தை வளர்க்கவும், நல்ல சமூக நீதிகளையும் ஒழுக்கங்களையும் கற்றுக்கொள்ளவும் ஏற்றவகையில் இக்கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதகக் கதைகளில் தமிழ், வடமொழி, கிரேக்க மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகின்றது. இவற்றின் தொடர்பு ஒற்றுமை என்பனவற்றை வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சாதகக் கதைகள் பற்றிய ஆசிரியரின் ஆய்வுக்கட்டுரை ஒன்றும் இந்நூலில் அநுபந்தமாக இடம்பெற்றுள்ளது. திலக் ஜெயசூரிய, சுதா ஆகிய ஓவியர்களின் கைவண்ணத்தில் நூலின் கதைகள் மெருகூட்டப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28210).
12A46 ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்.
த.கனகரத்தினம். சென்னை: 600098: தாமரை பப்ளிக்கேஷன்ஸ், 41B, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (சென்னை: NCBH Computers).
viii, 52 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×18.5 சமீ.
பன்மொழிப்புலவர் மயிலங்கூடல் த.கனகரத்தினம் அவர்கள் சிறுவர்களுக்காக மொழிபெயர்த்த சாதகக் கதைகள் இவை. அனைத்தையும் விலங்குகளோடு சம்பந்தப்பட்ட கதைகளாகத் தொகுத்திருக்கிறார். வயதுசென்றவர்க்கு மரியாதை, பாசாங்கு, கீழ்ப்படிவின் அறம், எங்கே அந்த இரத்தினக்கல், நன்றிக் கடன், ஒற்றமையின்மையின் தீமை, பேராசை பெருநட்டம், ஒற்றுமையின் பலம், குசஜாதகக் கதை, சுருங்கை வழி ஆகிய கதைகள் இதில் அடங்கியுள்ளன. ஜாதகக் கதைகள் பற்றி அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையொன்றும் 11ஆவது அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் ‘சிறுவர்க்காய பிறமொழிக் கதைகள்: ஜாதகக் கதைகள்’ என்ற தலைப்பில் இலங்கையில் கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடாக செப்டெம்பர் 1987இல் முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பன்மொழிப் புலவர் மயிலங்கூடல் த. கனகரத்தினம் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி வல்லுநர்களுள் குறிப்பிடத் தக்கவர். தமிழ், சிங்களம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எழுதிய ‘செந்தமிழ் வளம் பெற வழிகள்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழியியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பாடநூல் எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். பண்டிதமணியின் மாணாக்கரான இவர் தமிழாசிரியர் பட்டமும் பெற்றவர். (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 10440)