சிவசம்புப் புலவர் (மூலம்). கா.நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்கள்), யாழ்ப்பாணம்: புலவரில்லம், இமையாணன்-உடுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxxviii, 75+593 பக்கம், விலை: ரூபா 2100., அளவு: 23.5×16 சமீ.
19ஆம் நூற்றாண்டின் ஈழத்துப் பெரும் புலவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் (1829-1910) இயற்றிய பிரபந்தங்களின் பெருந்திரட்டு இதுவாகும். தேவபாகம், மானுடபாகம் ஆகிய இருபெரும் பகுதிகளைக் கொண்டது. தேவபாகத்தில் சிவசம்புப் புலவரின் தெய்வீகம் தொடர்பான பாடல்களும், மானுடபாகத்தில் அவரது உலகியல் தொடர்பான பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 19ஆம் நூற்றாண்டிற் பழந்தமிழ் மரபை அடியொற்றிய போக்கின் பெரும்புலவராக விளங்கியவர் இவர். அந்த நூற்றாண்டிலே தமிழகத்தில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும், இலங்கையில் சிவசம்புப் புலவரும் பழந்தமிழ் மரபின் இருபெரும் தூண்களாக விளங்கினர். சமகாலத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர்பால் மிகுந்த மதிப்புக்கொண்ட சிவசம்புப் புலவருக்கு ‘புலவர்’ பட்டத்தை நாவலரே வழங்கிக் கௌரவித்தார். 60க்கும் மேற்பட்ட பிரபந்தங்களை இவர் பாடியுள்ளார். அந்த நூற்றாண்டின் சிறந்த உரையாசிரியருள் ஒருவராகவும், கண்டனக் காரராகவும் சைவசித்தாந்தவாதியாகவும் விளங்கியுள்ளார். இலங்கைத் தமிழ்க் கீர்த்தனை மரபின் முன்னோடியாகவும் இவர் விளங்கியுள்ளார். ‘சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு’ என்ற தொகுப்பின் முதற் பாகம் 1939இல் செவ்வந்திநாத தேசிகரின் முயற்சியால் வெளிவந்திருந்தது. (பார்க்க: நூல்தேட்டம் 7454). நீண்ட கால இடைவெளியின் பின்னர் 2014இல் பெருந்திரட்டு வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியருள் ஒருவரான புலவர்மணி கா.நீலகண்டன் சிவசம்புப் புலவரின் பூட்டனாவார்.