10495 இனி எனது நாட்களே வரும் (நிலாந்தனின் பரிசோதனைகள்).

நிலாந்தன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5 ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 5: ஜோதி என்ரர்பிரைசஸ்;).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89867-59-1.

நிலாந்தனின் இந்த நூல் மூன்று நீண்ட கவிதைகளை உள்ளடக்கியது. முதலிரு நீண்ட கவிதைகளும் வன்னியில் முன்னர் நூல்வடிவில் வெளிவந்தவை. (வன்னி மான்மியம் – நூல்தேட்டம் பதிவு இலக்கம் 1689, யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே – நூல்தேட்டம் பதிவு இலக்கம் 1511). இறுதி நீண்ட கவிதையான யுக புராணம் முதல்முறையாக நூல்வடிவம் பெறுகின்றது. வன்னி மான்மியத்தின் ஒரு பகுதியான மண் பட்டினங்கள் தனியாக, சிறு நூலாகவும் முன்னர் வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவு இலக்கம் 1497). இவரது பரிசோதனை முயற்சிகள் அனைத்தையும் ஒருங்குதிரட்டி வெளிவரும் இத்தொகுப்பின் கவிதைகள் வன்னி மான்மியம், மண் பட்டினங்கள், தஸ்யு மான்மியம், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல், யாழ்ப்பாணமே ஒ எனது யாழ்ப்பாணமே, புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்; பாலை நிலத்தின் புதிர், கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை, யுகபுராணம், ஆகிய தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. நிலாந்தனின் பரிசோதனை முயற்சிகளின் வடிவத்தை ஒருங்குசேர தனியொரு நூலாகப் பார்வையிடும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான நிலாந்தன் (23.10.1965), 1995 இல் நிகழ்ந்த வலிகாமம் இடப்பெயர்வுக்குப் பின்னர் 1995-2009 காலகட்டத்தில் வன்னியிலும், 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின் யாழ்ப்பாணத்திலும் வசித்துவருகிறார். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை பத்திரிகையில் இவரது கருத்தோவியங்கள் வெளிவந்திருந்தன. இவரது அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் பத்தி எழுத்துக்களும் திசை, ஈழநாதம், ஈழநாடு, பாரிஸ் ஈழநாடு, எரிமலை, வீரகேசரி உள்ளிட்ட பல ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும்; பிரசுரமாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்