வயலற் சரோஜா (இயற்பெயர்: சீ.கத்தரின் வயலெற்). திருக்கோணமலை: திருமதி வயலற் சரோஜா, சாணக்கியன் வெளியீட்டகம், 1295/1, பாலையூற்று, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி).
124 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.
ஆசிரியரின் மனதில் மலர்ந்த 64 புதுக்கவிதைகளின் தொகுப்பு இது. முரண்பாட்டுப் பூட்டுகளை உளி கொண்டு உடைத்தெறிந்து முன்னேறிச் சாதனை படைக்குமாறு அறைகூவல் விடுகிறார். பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள் என்ற கவிதை பெற்றோரின் அறியாமையைக் களையும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. அடைக்கும் தாழ், அகிம்சை, அழிவிற் பிறப்பது ஆக்கமே, அறுத்துவிடு, அடிமை, அறியாமை, அக்கினிகள் போன்ற கவிதைகள் மனித அவலங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்பார்க்கின்றன. இறுதிச் செதுக்கல், இமையான காதல், இலங்கை அகதிகளை நோக்கிப் பட்டினத்தடிகளார், உன்னைத் தள்ளிவிடும் போன்ற கவிதைகளில் நம்பிக்கைத் துரோகம், அகதிகளின் அந்தஸ்து என்பன பற்றிப் பேசப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52903).