இ.சம்பந்தன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).
xvi, 159 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.
சம்பந்தனின் மூன்றாவது கவிதைத் தொகுதி. புகலிட ஊடகங்களில் இவரது கவிதைகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அவற்றின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இலங்கையில் வாழ்ந்தபோது, தனது 15ஆவது வயதில் இலங்கை வானொலியில் கவிதை பாடிய இவர், 1984ம் ஆண்டு முதல் ஜேர்மன் நாட்டில் இராட்டிங்கன் நகரை வாழ்விடமாகக் கொண்டுள்ளவர். தாய் மண் பற்று, தமிழில் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற பேரார்வம், தாயகத்திலும் புகலிடத்திலும் சமகாலத்தில் தரிசித்த வாழ்க்கைச் சவால்கள், வாழ்வின் இன்ப துன்பங்கள், அடிமனத்தில் படிந்துவிட்ட வடுக்கள், தாய்நாட்டுக் கனவுகள், ஏக்கங்கள் என பல்வேறு கருப்பொருள்களில் பெரியதும் சிறியதுமாக இவரது கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. மானுடத்தின் துயர்துடைக்கும் நோக்குடன் பேனா பிடிக்கும் இவரது கவிதைகள் பலவும் எளிமை, பொருண்மை, நடப்பியலுண்மை, கலைத்துவம் முதலியன கொண்டு விளங்குகின்றன. தான் பிறந்து வளர்ந்த மண்ணான புங்குடுதீவின் மீது அவர் கொண்ட பற்றின் பிரதிபலிப்பை பல கவிதைகளில் காணமுடிகின்றது. 2000ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்ட மொத்தம் 232 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் 74 ஹைக்கூ கவிதைகளும் அடங்குகின்றன.