கடலூரான் சுமன் (இயற்பெயர்: மரியாம்பிள்ளை சுமன்). ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி).
74 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-77620-2-9.
யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு முள்ளியான் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமன். கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைப் பெற்றவர். கவிதை என்பது கற்பனையில் உருவாகுவது என்பதை முற்றாக நிராகரிக்கும் இக்கவிஞனின் யதார்த்தக் கவிதைகளில் வறுமை விடும் கண்ணீரின் கனமும், போரின் இழப்புகளில் இன்னமும் ஆறாத காயங்களும், பெண்ணியத்தின் இடர்களும், இடப்பெயர்வின் அவலமும் காதலின் உணர்வும் களங்களாகியுள்ளன. ஈழப்போர் ஏற்படுத்திய வலிகளைப் பேசும் பல கவிதைகளில் தாய் தந்தையரை இழந்த சிறார்கள், கணவனை இழந்த மனைவியர், வறுமை நிலை, முகாம் வாழ்க்கை போன்ற விடயங்களுடன் தமிழுணர்வு, வாழ்க்கை மாற்றங்கள், இயற்கை, சலனங்கள், போன்றவையும் பாடுபொருளாகியுள்ளன. எளிமையான மொழிநடை, கருத்தச் செறிவு, பிசிறற்ற சொற்பிரயோகம் ஆகியன இவரது படைப்புகளுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. கடலூரான் சுமனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. இதில் 35 கவிதைகள் அடங்கியுள்ளன.