காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: காத்தான்குடி பௌஸ், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: V4U அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை).
64 பக்கம், விலை: ரூபா 190, அளவு: 18×12.5 சமீ.
உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத்” உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள் சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன. இத்தகைய பெருமைமிக்க நபிகள் நாயகத்தின் வாழ்வின் சில பக்கங்கள் காத்தான்குடி பௌஸ் அவர்களின் கவிதைகளுக்குள் சிறைப்பட்டுள்ளன.