ஆனந்தமயில் முல்லைத் திவ்யன். வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு, கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்:குரு பிரின்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
ix, 43 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 130., அளவு: 20.5×14 சமீ.
முல்லைத்திவ்யன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் த. ஆனந்தமயில்- ஓர் எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுப்பை 2008இல் தந்தவர். தந்தையின் வழியில் இவரும் ஒரு எழுத்தாளராகப் பரிணமித்துள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கையைத் தொடரும் மாணவரான இவரது கவிதைத் தொகுதியே நல்லதோர் கனவும் அந்தரிப்போரும் என்ற பெயரில் அமைந்துள்ளது. போரினால் ஏற்பட்ட வடுக்களையும், ஏனைய சமூகப் பிரச்சினைகளையும் களமாகக் கொண்டு இவரது கவிதைகள் புனையப்பெற்றுள்ளன. எண்ணற்ற கனவுகளோடும் ஏக்கங்களோடும் வாழ்ந்து சிதறிப்போன பல்லாயிரம் ஈழத்தமிழர்களின் குரலாக இவரது கவிதைகள் ஒலிக்கின்றன. போரினால் மரணித்த ஆன்மாவின் குரல், எழுத முடியவில்லை, பிணைப்புகளும் அவலங்களும், நா ஆடா நம்தேசம், அந்தரிப்போர், வரப் போகிறானே மகன், வன்னி நிலத்தவன் போன்ற கவிதைகளின் தலைப்புகளே கவிதையின் உள்ளடக்கம் பற்றிப் பேசுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50690).