பானுபாரதி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை-5: ஜோதி என்டர்பிரைசஸ்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
ஆண்கவிஞர்களின் அடிப்படையான ஆண் என்ற ஒரேயொரு அடிப்படைத் தகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட போர்க்கால அரசியல் பேசும் பெண்கவிஞர்களை தமிழ்த் தேசிய வரலாறு உருவாக்கித் தந்திருக்கிறது. இதில் சிவரமணி, செல்வி போன்று பானுபாரதியும் ஆண்களின் கவி அரசிலிருந்து மாறுபட்ட பெண்மொழி அரசியலைப் பேசியிருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் இவர் எழுதிய கவிதைகளில் தொலைத்தவையும், திருடிச்சென்றவையும், அழிந்தவையும் போக, எஞ்சியவற்றுள் 31 கவிதைகளை இத்தொகுதியில் காணமுடிகின்றது. போர் உக்கிரம் பெற்றிருந்த சூழலில் இவர் எழுதிய 15 கவிதைகளும் 1991க்குப் பிற்பட்ட காலத்தில் புலம்பெயர்வாழ்வில் எழுதிய 16 கவிதைகளும் இதில் அடங்குகின்றன. கொலை சுமந்த இருளின் சாட்சியங்களாய் கீறிக்கொண்டு நகரும் பானுவின் கவிதைகள் ஈழத்து, புலம்பெயர்ந்த பொதுவான இனவுணர்விலிருந்தும் நாம் கண்டறிந்த பொதுவான காதல்சார்ந்த பாடுபொருள்களிலிருந்தும் விலகி, ஒடுக்கப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தைப் பிரதியாக்கமாய்த் தருகின்றது. காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலும் சுயத்தின் சாயலை இழக்காமலும் அதே வேளை தீவு-ஈழம்-புலம்பெயர்வு-உலகம் என அவரது அகதி வாழ்வைப் போன்றே கவிதைகளின் பயணமும் இருக்கின்றன.