சிவானந்த ஐயர் (மூலம்).ஐ.பொன்னையாபிள்ளை (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: சிவஸ்ரீ சிவகடாட்ச கணேசலிங்கக் குருக்கள், பாலர் ஞானோதய சபை, காசி விநாயகர் தேவஸ்தானம், வீணாக்கடவை, 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1936. (மானிப்பாய்: சௌந்தரம் அச்சகம்).
xx, (4), 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.
புலியூர் என்றழைக்கப்படும் சிதம்பரத்திலே இருக்கின்ற நடராஜப் பெருமானுடைய பெருமைகளைச் சொல்லிப் பாடப்பட்டதே புலியூர்ப் புராணம். இப்புராணத்தை பாடியவர் தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையர். சிவானந்தையர் அவர்கள் சிதம்பரத்திலே இருந்த பச்சையப்பன் கலாசாலை என அழைக்கப்பட்ட ஆங்கில பாடசாலையிலே தமிழ்ப் பண்டிதராக இருந்த அக்காலத்திலே நடராஜப் பெருமான் மீது புலியூர் யமகஅந்தாதி எனும் ஒரு அந்தாதியினை பாடினார். அதனை சிதம்பரத்திலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியதும் விரிவாக புலியூர்ப் புராணத்தை பாடினார். புலியூர்ப் புராணத்திற்கு முதனூல்களாக இருந்தவை சூதசங்கிதையும், வாசிட்டலிங்கமும், பவிடியோத்தரபுராணமும் மற்றும் காந்தமுமாம். இப்புராணத்துள் நாட்டுப்படலம் முதலியன ஒழியப் பத்தொன்பது படலங்களாக வகுத்துப் பாடியதாக ஐயரவர்கள் கூறியுள்ளார். இந்நூலை எழுதி முடிக்க முன்னரே அவர் அமரரானதாலோ அல்லது வேறு காரணத்தாலேயோ, இந்நூலை பதிப்பித்த ஏழாலை சுதேசவைத்தியர் ஐ. பொன்னையா பிள்ளை அவர்கள் பதினேழு படலங்களையே பதிப்பித்திருக்கின்றார். இந்நூலை பூரணப்படுத்த முன்னரே ஐயர் அவர்கள் தேகவியோகமாகியிருந்தாலும், இந்நூற்பிரதியை அவர் இப்புராணத்தை பாட ஊக்குவித்த தம்பையாப்பிள்ளை அவர்களிடத்தே கொடுத்திருந்தார். பிள்ளையவர்களும் காத்திராப்பிரகாரம் தேகவியோகமாகிவிட பலகாலம் யாரும் அறியாது இப்புராணம் மறைந்திருந்தது. பின்னர் பிள்ளை அவர்களின் மனைவியார் பவளநாயகி அம்மையார் இதனை 1936இல் யாழ்ப்பாணம் திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலையின் வாயிலாகப் பதிப்பித்து தன் கணவர் நினைவாக வெளியிட்டிருந்தார். இப்புராணத்தை பதிப்பித்த போது அதற்கு சிறப்புப் பாயிரம் செய்தவர் சுன்னாகம் காவிய பாடசாலை தலைமை தமிழாசிரியராக இருந்த சி. கணேசையர் அவர்கள். இவ்விரண்டாம் பதிப்பு பாலர் ஞானோதய சபையின் 38ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.