செ.பாஸ்கரன். அவுஸ்திரேலியா: தமிழ்முரசு பதிப்பகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (சென்னை 5: கணபதி என்ரர்பிரைசஸ்).
120 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இன்று வாழ்கின்ற செ.பாஸ்கரனின் 52 தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு. எல்லாவற்றிற்கும் பழகித்தான் விட்டோம் என்ற கவிதையிலிருந்து தொடங்கி, காத்திருப்போம் என்ற இறுதிக்கவிதை ஈறாக கவிஞரின் கருத்தியல் தமிழ்த் தேசியம் சார்ந்தது என்பதை இத்தொகுதியில் உள்ள கவிதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. கவிஞரின் கவிதைகளில் சில தாயக நினைவுகள் தரும் ஏக்கங்கள், வாழும் நாட்டில் இயந்திர வாழ்க்கையால் ஏற்படும் மனவிரக்தி போன்றவற்றோடு தனது தாய்மண்ணின் சமகால அரசியல் விமர்சனம், தாய்மண்ணில் தான் காணும் சமுதாயச் சிக்கல்கள், போன்றவற்றைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. சில கவிதைகளில் விடுதலைக்காகப் போராடியவர்கள் விட்ட தவறுகள், கட்சி மோதல்கள், தீர்க்க தரிசனமற்ற தவறான முடிவெடுப்புகள் போன்றவற்றையும் பாடியள்ளார். தமிழ் மக்களின் விடுதலையை இவரது கவிதைகள் அவாவி நிற்கின்றன. 30 வருடப் போராட்டம் வீணாயிற்றே என இடையிடையே ஏங்குகின்றார். புத்தன் புனிதமுடன் போதித்த பூமி இன்று பொய்யர்களின் வாழ்விற்குள் பொசுங்குகின்றதே எனக் கவலைகொள்கிறார். சிட்னியில் ஏ.டீ.பீ.சீயின் தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், நவீன நாடகக் கலைஞராகவும் தமிழ் முரசு இணையத் தள சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துவரும் செ.பாஸ்கரன் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு கவிஞராக அறிமுகமானவர். சிட்னியின் பல கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர்.