க.தா.செல்வராசகோபால் (மூலம்), எட்வேட் இதயச் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: சீவன் பதிப்பகம், இல.3, 1292, Sherwood Mills BLVD, Mississauga, L5V 1S6, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, 2007. (ரொரன்ரோ: றி கொப்பி).
(50), 260 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ.
26.11.2005 அன்று இந்து சமுத்திரத்தில் சுமத்திரா தீபகற்பத்துக் கடலில் ஏற்பட்ட நிலக்கீழ் புவியதிர்வினால் சுவறி மேலெழுந்த கடல்நீர் பொங்கிப் புரண்டு இலங்கைக் கரையை அழித்துத் துவம்சம் செய்திருந்தது. அந்தக் காவியத்தை ஈழத்துப் பூராடனார் இங்கு பாடியுள்ளார். சுனாமியின் போது பல்லாயிரம் மக்கள் உயிரிழந்தும் பலர் காணாமல் போயினர். பல்லாயிரம் மக்கள் ஏதிலிகளாக ஏதிலி இல்லங்களில் தங்கவைக்கப்பட்டனர். மீன்பிடித்தல், உழவுத்தொழில் என்பவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இக் கொடுமைகளை ஈழத்துப் பூராடனார் பாட்டுவடிவில் காவியமாக்கியுள்ளார். கடல் என்னும் நீலத்திரையில் கடலியல், கடலியல்சார்ந்த கருத்துக்களை வண்ணக் கலவையாக்கி, எழுத்துக் கவிதை என்னும் தூரிகையால் இக்கடல்கோள் காவியம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று பாகமாக அமைந்துள்ள இந்நூல் இயற்கைவியற் பகுதி (கடவுள் வாழ்த்தியல், பருவகாலவியல், கடலெனும் பாதாள உலகு, கடலடி அதிர்வியல், பேரலைஇயல், கடல்கோளியல், கடல்கொள்ளை கொண்டகோண்டுவானா, தமிழகக் கடற்கோளியல், கடல்கோள்சார் எடுத்துக்காட்டியல், கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலவியல், நோவா காலப் பிரளயவியல்), நூற்பகுதி (ஒன்பதாவது கடற்கோள் தரவியல், உலகளாவிய ஆனந்தத் திருநாளியல், விண்ணும் மண்ணும் விரிகடலும் விம்மி அழுதன, பகுத்தறியும் பாங்கிழந்த பகுத்தறிவாளர் இயல்), உண்மை நிகழ்ச்சிக் காட்சிப் பகுதி (ஓவிய வரைவு இயல், மனிதன் நினைத்தான், இயற்கை அழுதது, இறைவன் நகைத்தான், இலக்கிய நுகர்வோர்க்குச் சிறு தகவல், சுமத்திரா கடற்கன்னியின்பிரசவ வேதனை, தரையிற் தாவித் தவழ்ந்த மாக்கடல், பதப்பொருள் விளக்கம், ஊரை அழித்த நீரழிவு, ஆழிப் பேரலை அளித்த மனித அவலம், வாழ்வு அவலம்) என இப்பிரிவுகள் அமைகின்றன. மரபுப் பாடல்களாகக் காவியம் பாடப்பட்டுள்ளது. நூலாசிரியர் முன்னுரையும் இ.தங்கராசா அவர்களின் ஆங்கில முன்னுரையும் கடல்கோள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் வழங்குகின்றன. கடலியல் பற்றிய அறிவியல் கருத்துக்களைச் செய்யுள் வழியாகப் பரப்பும் முயற்சியில் ஆசிரியர் வெற்றிகண்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45070).