மாத்தளை பெ.வடிவேலன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ புளுமென்டால் வீதி).
xxiv, 180 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-9396-55-0.
மாத்தளை வடக்கைப் பிறப்பிடமாகக்கொண்ட பல்கலைக்கழகப் பட்டதாரியான நூலாசிரியரின் சிறுகதைத் தொகுதி இது. இந்து சமய இராஜாங்க அமைச்சின் உத்தியோகத்தரான இவர், ஒரு பாடசாலை அதிபராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளர், சமூகத்தொண்டர் ஆகிய பரிமாணங்களில் வலம்வருபவர். இலக்கியச்செம்மல், கலாபூஷணம் விருதுகளைப் பெற்றவர். இச்சிறுகதைத் தொகுதி இருபது கதைகளைக் கொண்டது. சொல்லாட்சித் தொடர்களும், எழுத்துவன்மையும் ஒளிவிடும் இவரது படைப்புக்களில் தோட்டமக்களின் துயரமும்,வறுமையும், ஏழ்மையும் பேசப்படுகின்றன. புத்தாண்டு புதிதல்ல என்ற கதை காமாட்சிப் பாட்டி கொடுமையான ஏழ்மைக்கு மத்தியிலும் பேரனின் ஆசையை நிறைவேற்றும் அழகு கண்களைப் பனிக்கச் செய்கின்றன. ஆங்கோர் ஏழைக்கு என்ற கதை படித்தவர்களின் பண்பற்ற செயலை எடுத்துக்காட்டுகின்றது. உரிமை வேண்டும் என்று போராடிய வேதநாயகம் ஆசிரியருக்குத் தான் தொடங்கிய பாடசாலையை அரசு சுவீகரித்த பின்னர் பிரஜாவுரிமை இல்லாமை காரணமாக வேலை செய்ய உரிமையில்லை என்று உதறிவிடுவது வேதனையை அளிக்கின்றது. பிஞ்சு உலகம் இடாப்பில் வரவைக் கூட்டி குடும்பத்திற்கு வேலை தேடும் கயமையை எடுத்து விளக்கும் கதை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52848).