யோகேஸ்வரி சிவப்பிரகாசம். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த,மருதானை வீதி, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
112 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-3766-4.
இந்நூல் உள் மறைந்த உணர்வொன்று, இடைவெளி, சீதனம் கொடுத்தால், காத்திருப்பு, எண்ணம் ஈடேறப் போகிறது, ஏனிந்தப் பெயர்?, கிடைக்க வேண்டும், தலை, நம்புவதால், அத்திவாரக் கல், யாரிடம்தான் சொல்லியழ, இன்னும் பேச வேண்டும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 12 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கதைகள் போர்க்கால வடுக்களைச் சுமப்பவை. வடபுல மக்களின் சமகால ‘இயல்பு’ வாழ்க்கையைச் சித்திரிப்பவை. வலிகள், வேதனைகள், சோதனைகள் என்பன கதைகளில் முனைப்புற்று நிற்கின்றன. தலைப்புக் கதையான இன்னும் பேச வேண்டும்- பெண்ணுரிமை பற்றிப் பேசுகின்றது. சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவனின் உணர்வும், தமிழ்ப்பெண் சத்தியாவின் மேல் அவன் கொண்ட பரிவையும் உள்மறைந்த உணர்வொன்று என்ற கதை விபரிக்கிறது. தமது சொந்த வீட்டிலேயே சுதந்திரத்தை இழந்து நிற்கும் வயதான பெற்றோரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது -சீதனம் கொடுத்தால் என்ற கதை. அத்திவாரக் கல்-சமூக நலனுக்காக ஏற்கெனவே நாட்டப்பட்ட அத்திவாரக்கல், அரசியல்வாதிகளின் அசிரத்தையையும் சுயநலப்போக்கையும் விமர்சித்து மனம் நோவதாகச் சித்திரிக்கின்றது அத்திவாரக்கல் என்ற கதை. பெரும்பாலான கதைகளின் முடிவை வாசகர்களின் தீர்ப்புக்கே ஆசிரியர் விட்டுவிடுகின்றார். இக்கதைகள் முன்னர் மல்லிகை, ஜீவநதி, தினக்குரல், பூபாளராகங்கள் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.