எஸ்.முத்துமீரான். நிந்தாவூர் 12: மீரா உம்மா வெளியீட்டகம், இல. 77, 2ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மருதமுனை: அப்னா பிறின்ட்).
110 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-8281-07-9.
ஆசிரியரின் நான்காவது சிறுகதைத்தொகுதி இதுவாகும். சமூகப்பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் பதினொரு கதைகளைக் கொண்ட நூல் இது. பிரதேச மொழியில் அமைந்துள்ள இக்கதைகளில் இடம்பெறும் சில சொற்களுக்கு அடிக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. தலைப்புக் கதையாக அமையும் கதையில் ஊரில் பெரும் பணக்காரராகிய உதுமான் லெப்பை வைத்தியத்துறையில் படித்துப் பட்டம் பெற்ற தன் மகனின் காதலைக் கொலைசெய்து அவனைப் பைத்தியமாக்கி நடைப்பிணமாக்கி விடுகிறார். ‘போடுங்கடா டயரை’ என்ற கதை தனது ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரைத் தீர்க்காத அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் அநாகரிகத்தை விளக்குகின்றது. ‘சட்டம்’ என்னும் கதை அலிமாவின் பாசத்திற்கும் உரிமைக்கும் பரிவுக்கும் இடம்கொடாத சமூகத்தின் நிலையை எடுத்துக்காட்டுகின்றது. ‘சுல்தான் காக்கா’ என்ற கதை யாழ்ப்பாணத்திலிருந்து சொத்து சுகமிழந்து அநாதரவாக வந்து ஊர்மெச்ச வாழ்ந்து ஊராரின் மதிப்போடும் மரியாதையோடும் அடக்கம் செய்யப்படுகின்றபோதிலும் அவரின் இறுதி ஆசை நிறைவேறாமல்போவதை வலியுடன் சொல்கின்றது.