பதுளை சேனாதிராஜா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xvii, (4), 22-127 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-4022-0.
சட்டத்தரணியான ஆசிரியரின் பன்னிரு சிறுகதைகள் கொண்ட முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. மலையகப் படைப்பிலக்கியவாதி தெளிவத்தை ஜோசப்பின் ஏழு பக்கங்கள் கொண்ட நீண்ட முன்னுரையுடன் கூடியது. குதிரைகளும் பறக்கும், குறியீடுகள், நிலா இல்லாத பௌர்ணமிகள், கோணல் சித்திரங்கள், அட்டைகள், முற்றுப்புள்ளி, சலனம், கனவுகளுக்கு விடுமுறை, இன்னொரு ஹீரோஷிமா, இட்லரின் இடைவேளை, பிளெக் மெஜிக், நகர்வு ஆகிய பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கதைகள் மண்வாசனைமிக்க பாத்திர உரையாடல்கள் மூலம் வளர்க்கப்படுகின்றன. தலைப்புக் கதையான குதிரைகளும் பறக்கும் என்ற கதையில் கொழும்பில் வேலைக்கமர்த்தப்படும் மலையகச் சிறுமியின்மீது அபாண்டப் பழிசுமத்தும் எசமானிக்கெதிராக கொதித்தெழுந்து சுயகௌரவத்துடன் தன் மகளை மீட்டுச் செல்லும் தந்தை கார்மேகத்தின் மன உணர்வு காட்டப்படுகின்றது. தன்னைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தமுயன்ற மேசன் பிரேமதாசாவை செங்கல்லால் தலையில் அடித்துக் காயப்படுத்திவிட்டு தான் செய்தது நியாயம் என்ற நிலையில் படுத்துக்கிடக்கும் மீனாட்சியின் கதை-சலனம். இவ்வாறாக வகைவகையான வடிவங்கள், உத்தி வேறுபாடுகள், கதைசொல்லும் முறைகள் எனப் பல்வேறு விடயங்களிலும் கவன ஈர்ப்பை ஆசிரியர் பெறுகிறார்.