உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்ல: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2013. (மாவனல்ல: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).
xv, 88 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0503-04-9.
மாவனல்லை, உடுநுவரைப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை எழுதும் படைப்பாளியான உ.நிசார், ஏழு சிறுவர் பாடல் நூல்களையும், மூன்று கவிதைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இதில் ஞானம், மல்லிகை, ஜீவநதி போன்ற சஞ்சிகைகளில வெளியாகிய இவரது ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன. உறுத்தும் உள்ளங்கள், ஒப்புரவு, பச்சை மனிதன், உதை, பறந்து செல்லும் பறவைகள், பெரிய மீன்கள், ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும், ஆங்காரம் அடங்கியது, இரத்த பாசம் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. உறுத்தும் உள்ளங்கள் கதையில், பாவத்துக்கு அஞ்சும் மனதைக்கொண்ட, தமீம் ஹாஜியார் தான் உருவாக்கிய பீடித் தொழிற்சாலை, அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணானது என்றெண்ணி உள்ளம் குமைகின்றார். ஒப்புரவு என்ற கதை நீண்டகாலமாக வீட்டில் இருந்த கொம்பன் யானையைப் பிரியமுடியாத நோணாச்சியின் அன்பை வெளிக்காட்டுகின்றது. பச்சை மனிதன் விஞ்ஞான நோக்குடன் எழுதப்பட்டது. விஞ்ஞான ஆய்வுத்துறை என்றுமே அரசியல் ஆட்சிப்படியே நடக்கின்றது என்பதைக்காட்டுகின்றது இக்கதை. உதை என்ற கதை பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் இடையிலான பேதத்தை மாமியார் சகீனா, ஹசீமுக்குக் கூறுவது இஸ்லாத்தின் நம்பிக்கையைக் காட்டுகின்றது. பெரிய மீன்கள் என்ற கதை மன்சூர் துரையின் பேராசை, பணத்திமிர் என்பவற்றைச் சொல்வதோடு மரணத்திக் பின் அவமானதைதையும் அவர் சுமந்து செல்வதைக்காட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53050).