10722 புதிய படைப்புலகம்: சிறுகதைத் தொகுதி.

தேவி பரமலிங்கம் (இயற்பெயர்: தம்பிராசா பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: குருநகர் நாட்டுக்கூத்து மன்றம், 20, கடற்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).

120 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 20.5×14.5 சமீ.

ஆசிரியரின் பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. குருவிச்சை, கரை ஏறும் அலைகள், சுவர்க்க வாசல், பூகம்பப் பூமி, அசுர யாத்திரை, மத்தளம், அம்மாச்சி, சுவடுகள், தொப்புள்கொடி, கடலாறு, கோவில், கடைச்சங்கம், தணல்வடு, புதிய படைப்புலகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இச்சிறுகதைகளின் பேசுபொருளாகப் பெரும்பாலும் அடிநில மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்க்க எடுக்கும் முயற்சிகள் ஆகியவை உள்ளடக்க நேர்த்தியுடன் அமைந்துள்ளன. எல்லாக் கதைகளிலும் ஊடுபாவாக ஓடுவது ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, குடும்பச் சிக்கல், சிதைவு என்பனவாகும். ஈழத்து கலை இலக்கியத்துறையின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான தம்பிராசா பரமலிங்கம் யாழ்ப்பாண நவாலியைச் சேர்ந்தவர். 1962ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையின் ‘வளர்மதி’ மாணவர் பகுதி ஊடாக எழுத்துத் துறையில் பிரவேசித்தார். ‘வடு’ என்ற இவரது முதலாவது சிறுகதை சுதந்திரன் பத்திரிகையிலேயே பிரசுரமானது. தினகரன் முதலான பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் இதுவரையில் வெளிவந்துள்ளன. நவாலியூர் பரமலிங்கம், மூலபாரதி, பட்டனைந்து, பூமணி மைந்தன், தேவி பரமலிங்கம் போன்ற புனைபெயர்களில் இவர் எழுதிவருகிறார். இலங்கை வானொலியில், சானா, கே. எம். வாசகர் போன்ற நாடகத் தயாரிப்பாளர்களின் காலத்திலிருந்து இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார். நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையின் 2013ஆம் ஆண்டுக்கான புனைகதைக்கான கலைஞானச் சுடர் விருதுபெற்றவர்.2001ஆம் ஆண்டில் யாழ். இந்து சமயப் பேரவையும், 2012ஆம் ஆண்டில் வடமாகாண சமூக முன்னேற்றக்கழகங்களின் சமாசமும் ‘கவிமணி’ என்ற பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்