எம்.எம்.ஹிதாயதுல்லாஹ். பண்டாரகம: எம்.எம்.ஹிதாயதுல்லாஹ், இல.1ஏ, மஹவத்த, அட்டுளுகம, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி).
xiv, 50 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 19.5×12.5 சமீ., ISBN: 955-99258-0-6.
களுத்துறை மாவட்டத்தில் அளுத்கமவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பாக இது அமைகின்றது. இவர் பயிற்றப்படட ஆசிரியரும், சட்டத்துறைப் பட்டதாரியுமாவார். இத்தொகுப்பில் சீறிப்பாயும் ஊற்றுக்கள், விரியத் துடிக்கும் மொட்டுக்கள், ஆணிவேர் ஆட்டங் காணுகின்றது, அழிந்துபோகும் பொய்மைகள், அறுந்துபோன முடிச்சு, அமானுஷ்யம் ஆகிய ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளன. சீறிப்பாயும் ஊற்றுக்கள் கிழக்கு மாகாண பேச்சு வழக்கில் அமைந்துள்ளது. எஞ்சிய அனைத்துக் கதைகளும் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகமையின் தனித்துவ பேச்சு வழக்கில் அமைகின்றன. சீறிப்பாயும் ஊற்றுக்கள் கற்பித்தற் பயிற்சிக்கு கிழக்கிலங்கைக்குச் செல்லும் ஒரு ஆசிரியரின் அனுபவமாக அமைகின்றது. இக்கதையில் இயந்திரமயமான கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் இதயமுள்ளதொரு ஆசிரியர் இனம்காணப்படுகிறார். விரியத்துடிக்கும் மொட்டுக்கள் என்ற தலைப்புக்கதை, வறுமையின் கொடுமை தாங்கமுடியாத நிலையில் பாடசாலையிலிருந்து இடை விலகும் ஒரு ஏழை மாணவனை மீண்டும் கல்வித்திட்டத்தில் இணைத்து வழிகாட்டும் ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பினை விளக்குவதாக அமைகின்றது. அழிந்துபோகும் பொய்மைகளில் பில்லி சூனியம் என்று ஏமாற்றும் லெப்பும்மாவின் பொய்முகம் கிழிக்கப்படுகின்றது. 1956 இனக்கலவரத்தின் ஒரு வெட்டுமுகத்தை அமானுஷ்யம் சித்திரிக்கின்றது. ஆணிவேர் ஆட்டம் காண்கின்றது என்ற கதையில் முஸ்லிம் கிராமங்களின் நடப்பியல் யதார்த்தம் பிரதிபலிக்கின்றது. நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பணம்தேடும் சமூகக் காவலர்களை தோலுரிக்கின்றது. அறுந்துபோன முடிச்சு, சமூக நிலைப்பாடுகள் மீது கொண்ட தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தும் மற்றைய கதைகளுக்கு மத்தியில் மென்மையான உணர்வுகளைக் கலையாக்கும் வகையில் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள கதையாகும்.