வி.ஜீவகுமாரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xxx, 234 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 8354-49-0.
புகலிடத்துச் சமூக நிகழ்வுகளைத் தாயக நினைவுகளுடன் பொருத்தி தான் தொடர்புபட்ட புகலிடச் சம்பவமொன்றின் பின்னணியில் எள்ளல் சுவையுடன் கதையை வளர்த்துச் செல்வது டென்மார்க்கில் வாழும் புகலிடப் படைப்பாளி ஜீவகுமாரன் என்ற கதைசொல்லியின் தனித்துவமாகும். தன்னைச் சுற்றியுள்ளதும் தான் சார்ந்ததுமான ஒரு சமூகம் தனக்குத் தரும் வலிகளையும் சமூக நலிவுகளையும் சமூகப் பிறழ்வுகளாகத் தான் காண்பவற்றையும் தனது கதைகளுக்குள் பொதிந்து வைக்கின்றார். தன்வீட்டுச் சமையலறைக்குள் வந்துசேர்ந்த ஜேர்மனிய கரப்பான்பூச்சிகளை அழித்தொழிக்கும் செயன்முறையோடு, முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பொருத்தியும், பிற தாயக-புகலிட நினைவுமீட்டல்களோடு ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் என்ற தலைப்புக் கதை அமைகின்றது. மேலும், ரணம், மாங்கல்யம் தந்துதானே, நாணயம், அழுக்கு, பிள்ளைபிடிகாரரும் பணக்கார அகதிகளும், 3014, நானும் எனது மரணமும், போர், தாம்பத்தியம், சுனாமி 2014, தேவதூதர்கள், இது இவர்களின் கதை, இடைவெளி, காக்க காக்க ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.