நீ.பீ.அருளானந்தம். கல்கிசை (மவுண்ட் லவீனியா): திருமகள் பதிப்பகம், 7, லில்லியன் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xii, 256 பக்கம், விலை: ரூபா 630., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1055-14-1.
வரலாற்றுரீதியாக இலங்கையின் பழங்குடி மக்கள் வேடுவர்களே என நிரூபிக்கப்பட்டாலும்கூட, இன்றைய இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்வியல் சூழலில் உரிய கவனத்திற்கு உள்ளாகாமலும் சமூகப் புறக்கணிப்புக்குள்ளாகியும் விளிம்புநிலைக்குக் கீழும், வனமும் வனம்சார்ந்த சூழலிலும் வாழ்கின்ற வனக்குறவர்களின் வாழ்வியலை ‘அலிக்கம்பே’ என்ற கிராமச் சூழலில் வைத்துச் சித்திரிக்கும் நாவல் இது. கதாமாந்தர்களுக்கிடையே நடைபெறும் நீண்ட உரையாடல்கள்கூட தெலுங்குமொழி ஓசையுடன் கலந்துள்ள வனக்குறவரின் பேச்சு வழக்கிலேயே ஆசிரியர் தந்துள்ளார். இவ்வனக்குறவ மக்களின் வாழ்வியல் கூறுகளான பெண்பிள்ளையின் சாமர்த்தியச் சடங்கு, திருமணச்சடங்கு, குழந்தை பிறந்த சடங்கு, மரணச் சடங்கு என்பவற்றையும், வனக்குறவரின் பிரதான தொழில்களான பாம்பு பிடித்தல், பாம்பு கட்டுதல் போன்ற நிகழ்வுகளின்போது அவர்கள் கையாளும் தொழில்சார நுட்பங்கள், இவர்கள் கையாளும் வழக்குகள், பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக இவர்கள் கையாளும் எழுதப்படாத நீதி முறைமைகள் என்று இம்மக்கள் கூட்டத்தினரின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகவும், தேவைக்கேற்பவும் இந்நாவலில் புகுத்தியிருக்கின்றார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200751).