எஸ்.ஏ.உதயன். சென்னை 6: காக்கைச் சிறகினிலே பதிப்பகம், 228, நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (தமிழ்நாடு: நந்தினி லோமிகோட், சிவகாசி).
(25), 199 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-52958-3-3.
ஈழப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? போராளிகளது அர்ப்பணிப்பும், போர்க்குணமும், அறிவும் ஆற்றலும் ஏன் அவற்றிற்குரிய வெற்றியைத் தரவில்லை என்பதைப் பற்றிய ஓர் உசாவலாக இந்நூல் அமைந்துள்ளது. ஈழப்போராட்டத்தை இலங்கையோடு இணைந்து இந்தியா தான் முடித்துவைத்தது என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையோ, அதேயளவு இந்தியா தான் ஈழப்போராட்டத்தை வெகுகாலம் நடத்திவந்தது என்பதும் உண்மை என்பதற்கான ஆதாரங்களை இந்நாவல் சுமந்துவருகின்றது. ஆயுதப் போராட்டத்தின் முதற்கட்டத்தில் பங்கெடுத்திருந்த இந்நூலின் ஆசிரியர் பாரிசில் மறைந்த தனது நண்பராகிய கவிஞர் கி.பி.அரவிந்தனுடன் ஆற்றிய பணிகளையும், பெற்ற அனுபவங்களையும் மீட்டுப்பார்க்கும் நினைவுகள் காலத்தின் கதையாக நாட்டிற்குள்ளும் நாடு தாண்டியும் இந்நாவலில் வியாபகம் பெறுகின்றது. ஈழப் போராட்டத்தில் பலர் இதுவரை அறிந்திராத இன்னுமொரு பக்கத்தை இந்நாவல் விபரிக்கிறது. வல்லாதிக்க சக்திகள் ஒருபோதும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்குத் தூய மனத்தோடு துணைபோனதான வரலாறே இல்லை என்பதை இந்நாவல் வெளிச்சமிடுகின்றது. நாவலின் முன்னோட்டமாக ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘பாசாங்கற்ற விவரிப்புகள் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம்’, வாசுகி பெரியார்தாசன் எழுதிய ‘இனியேனும் விழிப்பாய் இருப்போம்’, நூலாசிரியர் எஸ்ஏ.உதயனின் முகவுரையான ‘வல்லாதிக்க சக்திகள் ஒருபோதும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தூய மனதோடு துணைபோனதாக சரித்திரம் இல்லை’ ஆகிய கட்டுரைகள் இந்நாவலின் பின்புலத்தை கட்டியமைக்கின்றது. கி.பி.அரவிந்தனின் மரணச்செய்தியை பாரிசிலிருந்து கேள்விப்படும் கதைசொல்லி, அவருடன் தனக்கிருந்த தோழமை குறித்த நினைவுகளுக்குள் ஆழ்ந்து தாங்களிருவரும் ஈரோஸ் இயக்கத்திற்குள் ஆற்றிய பணிகளையும் பெற்ற அனுபவங்களையும் தனக்குத்தானே மீட்டுப்பார்க்கிறார். அவ்விரு இளைஞர்களின்; கதை ஒரு இனத்தின் கதையாக, அதனோடு தொடர்புடைய காலத்தின் கதையாக வியாபகம் கொள்கின்றது. ஒரு இயக்கத்தின் ஏற்பாட்டில் கள்ளத்தோணி மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியில் கரையிறங்கும் இளவல்களை வேறொரு இயக்கம் கடத்திச் சென்று தம்முடன் இணைக்கின்றது. அதிலிருந்து மீள்வது, மேம்போக்கான அரசியல் தத்துவார்த்த வகுப்புகளை நடாத்துவது, சென்னை முகாமுக்குள் அடைத்து வைப்பது, அங்கிருந்த டெல்லி வழியாக உத்தரபிரதேச முகாமை அடைவது என்று சுவாரஸ்யமாகத் தொடர்ந்து, கடுமையான பயிற்சிக்குப் பிறகு மலைவிட்டிறங்குவதுடன் கதை முடிகின்றது. விடுதலைக்காகப் போராடுவது என்ற கருத்தியலுக்கும், அதற்கான களப்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் இடையிலான மனவோட்டங்கள், சஞ்சலங்கள், சுயசமாதானங்கள், வைராக்கியம் ஆகியவற்றைச் சொல்லிச் செல்கின்றார். மன்னார் மாவட்டம், பேசாலையைச் சேர்ந்த உதயன் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராக ஈழத்தில் அறியப்பெற்றவர்.