செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: சாந்தி பிரசுரம், சுஜாதா பப்ளிக்கேஷன்ஸ், 50/29, வைரவர் கோவில் ஒழுங்கை, கொட்டடி, 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
98 பக்கம், விலை: ரூபா 7.90, அளவு: 21×14 சமீ.
இக்கதையின் நாயகி, தனது பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே உழல்கின்ற ஒரு பரிதாபத்துக்குரிய பாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். தியாகமென்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளாள். பகட்டும் படாடோபமும் தானே எல்லாம் என்ற எண்ண மேலீட்டில் தங்களை உயர்ந்த மனிதர்கள் என்று காட்டிக்கொள்ளும் உளுத்துப்போன இவ்வுலகத்தின் பிரகிருதிகளுக்கு மத்தியில் அவள் ஒரு சுமைதாங்கியாக, துயரத்தின் சின்னமாக, துன்பத்தின் பிறப்பிடமாக, வலம்வருகிறாள். சோதனைகள், துயரங்கள் அத்தனையும் மனவுறுதியுடன் தாங்கியும், அது வெடித்துச் சிதறும் நிலைக்கு வந்துவிடும் போது தன் உள்ளத்தை பெருமூச்சுகளால் தேற்றிக்கொண்டு நிலை தழும்பாமல் நிமிர்ந்து நிற்கிறாள். கதையின் நாயகி மனோரஞ்சிதம் சுயநலம் மிக்க, பொறுப்பற்ற தனது குடும்பச் சூழலிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும், அவ்வாறு விடுபட வாய்ப்புக் கிட்டியபோது கூட அதனை ஏற்கமுடியாமல் பின்னடைவதும் இந்தச் சமுதாயத்தை இயற்பண்புடன் எடுத்துக்காட்டுகின்றது. செங்கை ஆழியானின் பெயர் சொல்லும் சமூக நாவல்களுள் இதுவும் ஒன்று.