நீ.பி.அருளானந்தம். கல்கிசை (மவுண்ட் லவீனியா): திருமகள் பதிப்பகம், 7, லில்லியன் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xii, 197 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1055-11-0.
நந்திக்கடல் அருகே உள்ள கோப்பாபுலம் கிராமத்திலுள்ள உத்தமன் வீட்டுத் திட்டத்தில் உள்ள 50 குடும்பங்களினதும் அங்கு அவர்களிடையே வாழும் சமூகசேவகரான சண்முகத்தினதும் வாழ்வியல் பின்னணியில் இக்கிராமியக் கதை மலர்கின்றது. அந்தக் கிராமத்தில் கூத்து ஒன்று அரங்கேற்றப்படுவவதற்கு சண்முகத்தின் வீடே மத்திய நிலையமாக அமைகின்றது. வன்னிப்பிரதேச மக்களின் பிரசித்திபெற்ற கூத்துருவான காத்தவராயன் கூத்தைப் பழகி ஊரில் அரங்கேற்றுவதன் பின்னணியிலே கதை நகர்த்தப்படுகின்றது. இந்தக் கூத்தைப் பழக்கி, வெள்ளுடுப்பு அரங்கேற்றம் இறுதி அரங்கேற்றம் வரையும் நடைபெறுகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் துல்லியமான நாட்டாரியல் தகவல்களுடன் கதையில் பின்னப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். நாவலாசிரியரின் தந்தையார் நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா ஒரு நாட்டக்கூத்து அண்ணாவியார் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது. தான் எடுத்துக்கொண்ட கதைப் பிரதேசத்து மக்களின் உயிரோடு ஒட்டி உறவாடும் கூத்துக் கலை மீதான தாகத்தை வெளிப்படுத்துவதே கதையின் பிரதான ஓட்டமாயிருப்பதும் மற்றைய விடயங்கள் துணை நிகழ்வுகளாக அமைக்கப்பட்டிருப்பதும் அவதானிக்கமுடிகின்றது. நாவலின் இறுதி நிகழ்வு வன்னி மக்கள் எதிர்கொண்ட அழிவின் அவலத்தையும் இடப்பெயர்வின் துயரத்தையும் கோடிட்டுக் காட்டுவதோடு காத்தவராயன் கூத்து வன்னி மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது என்ற செய்தியையும் முன்னிலைப்படுத்துகின்றது.