தேவகாந்தன். சென்னை 600091: இலக்கு வெளியீடு, கு.3, கணேஸ் ரோயல், 2 பஜனை கோயில் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (சென்னை 5: மணி ஆப்செட்).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.
மாமூலனை ஆசிரியராகக் கொண்டு சிறிதுகாலம் வெளிவந்த ‘பறை’ இதழில் முதல் மூன்று அத்தியாயங்களை வெளியிட்டு, பின்னர் ரவியின் ‘வைகறை’ இதழில் மீண்டும் முதலிலிருந்து இறுதி அத்தியாயம் வரை வெளியிடப்பட்ட வரலாற்றுத் தொடர் நாவல் இது. விரிந்த வாசகர் பார்வைக்காக நூலுருவில் வெளிவந்துள்ளது. இராவணனின் ஆளுமைக்குட்பட்ட லங்காபுரம் வரலாற்றிலும், மனித மனங்களிலும் அழிந்துகிடக்கின்றபோதிலும் அதன் உச்ச அடையாளமான கோணேஸ்வரம் என்ற சிவனாலயம் மட்டும் காலகாலமாக அழிவுகளிலிருந்தும், மீளவும் எழுந்துகொண்டே இருக்கின்றது. லங்காபுரத்தின் அழிவு பெருங்கடற்கோளினால் மாத்திரம் நிகழ்ந்ததன்று. அதன் உள்ளோடியிருந்த சாதாரண மனித பலவீனங்களாலும் விளைந்ததெனக் கொள்கின்றார் நாவலாசிரியர். இப்பூமிப்பந்தில் எங்கேயும் எப்போதும் ஒரு லங்காபுரம் தோன்றியும் அழிந்தும் கொண்டுதானிருக்கின்றது. இவற்றின் தோற்றமும் மறைவுமான சுழல் எந்த விசையிலிருந்து பிறக்கின்றது? இதற்கான விடையைக் கண்டடைய முயல்கின்றது ‘லங்காபுரம்’ நாவல். ராம காவியத்தின் ராவணன் கதையை நவீன ஆழ்கடல் ஆய்வுகளினதும், துல்லியமாக அறியவரும் சரித்திரகால எல்லைக் கணிப்பீடுகளினதும் சாத்திய வெளியில் பொருத்துவதன்மூலம் இந்த முயற்சி நாவலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புனைவுகளின் மூலம் வரலாற்றைக் கண்டடையமுடியுமா? வரலாறுகள் புனைவுகளைப் படைபடையாய்க் கொண்டிருக்கிற போது, புனைவுகள்தான் வரலாற்றைக் கொஞ்சம் கட்டமைத்துப் பார்க்கட்டுமேன் என வழக்காடி நிற்கின்றது லங்காபுரம்.