சேனன். எஸ்ஸெக்ஸ் IG6 1AE: கட்டுமரம் பதிப்பகம், Hamilton Avenue, Illford, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (லண்டன் E12 6SL: CS Print and Books, 317, 1st Floor, High Street North).
98 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 18×12 சமீ., ISBN: 978-0-9933704-0-3.
இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. பாலியல் ஒடுக்குமுறைபற்றிய சில நுணுக்கங்களையும், பிரித்தானியாவில் சட்டபூர்வமாக்கப்படும் தன்னினச் சேர்க்கை பற்றியும் விவாதிக்கும் இக்கதை லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தமிழினத்தின் முதுசொமாக வந்திருந்த கலாசாரக் கோட்டை மதில்களை இரக்கமின்றி உடைத்திருக்கிறார் ஆசிரியர். தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் அணுகியுள்ளார். ஐயர் என்ற கதாபாத்திரம் தன் மனைவியை துன்புறுத்தியதன் மூலம் மனைவி அவரைப் பிரிந்து வேறோருவருடன் சேர்ந்து வாழ வழிசெய்கின்றது. சிக்கன் கடையொன்றில் வேலைசெய்யும் ஐயர் அங்கு பணியாற்றும் சாந்தெலா என்ற கறுப்பினப் பெண்ணை விரும்பி அவருடன் அவரது மாடிக்குடியிருப்பில் சேர்ந்து வாழ்கிறார். சாந்தெலாவுடன் விடுமுறைக்குச் செல்லவும், தனது முன்னாள் மனைவியைப் பழிவாங்கவும் தன்னினச் சேர்க்கையாளனான ரமேஷ் என்பவரின் உதவியுடன் தன் முன்னாள் மனைவியின் நகைகளைக் களவெடுக்கின்றார். ரமேஷ் இதற்கு உடந்தையாகவிருக்கிறான். பொலிஸ் இதனைக் கண்டறிந்து ரமேஷை கைதுசெய்ய அவரைத் தேடுகின்றது. ரமேஷின் காதலன் டியெகோ, சிக்கன் கடை பாஸ்கரனை மிரட்டி அதன்மூலம் ரமேஷை காப்பாற்ற முனைந்து தோற்கிறான். இந்நிலையில் லண்டன் கலவரம் வெடிக்கின்றது. இதனைச் சாக்காக வைத்து, பாஸ்கரனின் சிக்கன் கடையை டியேகோ எரித்துவிடுகிறான். இதன் விளைவாக ஊடகத்தின் கவனத்தை ஈர்த்த பாஸ்கரன் அதன்வழியாகப் பிரபல்யமடைகின்றான். டியெகோ சிறைசெல்கிறான். கழிவிரக்கம் காரணமாக ரமேஷை ஐயர் காப்பாற்ற முனைந்து தன்னினச்சேர்க்கையாளரின் சிவில் பாட்னர் ஒப்பந்தத்தை ரமேசுடன் செய்துகொள்கிறார். சாந்தெலா சோசலிஸக்கட்சியில் இணைகிறார். லண்டனின் விளிம்புநிலை மாந்தரின் வாழ்வை இந்நாவல் அழகான பாத்திரங்களாக்கியுள்ளது.