எஸ்.ஏ.உதயன் (இயற்பெயர்: ஏ.ஜே.கே.துரம்). சென்னை 600015: சாளரம், 834 அண்ணாசாலை, சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, மே 2008. (சென்னை: பொன்னர் அச்சகம்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னரான கதைக்களம் இது. 1926, 1927களில் பேசாலை வெற்றிமாங்குடியிருப்புப் பட்டினத்தைச் சீரழித்த கொலராக் கொள்ளைநோயும், 1931இல் மன்னார்தீவைப் பலமாகத் தாக்கிய சூறாவளியும் இக்கதையின் பின்புலமாகின்றன. (லோமியா- கடலில் காற்றுக்கும் அணையாமல் வெளிச்சம் கொடுக்கும் விளக்கு). தமிழ் நாட்டிலிருந்து பிழைப்புக்காக வந்துசேர்ந்த ஒரு குடும்பத்துக்கும், அந்தக் குடும்பம் வந்துசேர்ந்த ஊரின் பாரம்பரிய மக்களுக்கும் இடையிலான உறவுச் சிக்கலையே இந்நாவல் விபரிக்கின்றது. இந்தப் பின்னணியில் கடல் வாழ்க்கையும், தொழில் முறைமையும், கடற்கரையோரப் பண்பாட்டுக் கூறுகளும் நுணுக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. மன்னார்ப் பிராந்தியத்திற்கே உரித்தான பேச்சுமொழியும், சொற்றொடர்களும் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. அவையே இந்த நாவலுக்கான உயிர்ப்பையும் அளிக்கின்றது. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை உள்ளது உள்ளபடி வாசகருடன் பகிர்வதால் இந்நாவல் உயிர்ப்புடையதாகின்றது. மன்னாரில் பேசாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நாவலின் ஆசிரியர் (ஏ.ஜே.கே.துரம் 23.01.1964) நாடகத்துறையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இது இவரது முதலாவது நாவலாகும்.