குணா கவியழகன். சென்னை 600014: அகல், 348 ஏ, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை 600077: மணி ஓப்செட்).
256 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21.5×14 சமீ.
இக்கதைசொல்லி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர். இறுதிநாட்கள் வரை வன்னியில் வாழ்ந்தவர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நாட்களில் இராணுவத் தடுப்பு முகாம் என்ற முள்வேலிக்குள் அடைபட்டிருந்தார். பின்னர் விடுதலையாகி ஐரோப்பிய நாடான ஒல்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்று வாழ்கின்றார். ஈழப்போரிலக்கியத்தின் ஒரு பரிமாணத்தைப் பதிவுசெய்யும் இந்நூல், போர்க்கால வாழ்வின் மற்றொரு பகுதி இவருக்களித்துள்ள அனுபவத்தை நஞ்சுண்ட காட்டைத் தொடர்ந்து மற்றொரு நாவலாகக் கட்டவிழ்த்துள்ளார். ஐம்பொறிகளாலும் நுகரப்பட்டு ஆத்மாவின் இருப்புநிலையையே அலைக்கழித்த போருக்குப் பின்னதான அபூர்வ வாழ்வின் தருணங்கள் இங்கு பதிவுசெய்யப்படுகின்றன. தமிழீழமே பிரளயத்தைக்கண்டு முள்ளிவாய்க்காலின் நந்திக் கடலில் மோதி அழிந்தது. எஞ்சியவரிடம் எஞ்சிப்போனது வாழ்வு. இதைச் சுமக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் மனித மனத்தின் விந்தையான பாடுகளில் விடமேறிய கனவாக வீழ்ந்துவரும் தமிழ்ச்சாதியின் வாழ்வு இந்நுநாவலின் வழியாகப் பிரதிபலிக்கின்றது. முள்ளிவாய்க்காலின் முடிவுக்குப் பின்னைய போர்க்கைதிகளின் நிலைபற்றிய சுயசரிதமாக இந்நாவல் அமைகின்றது. கதையில் வரும் ருத்திரன் பாத்திரம் தானும் தன் நண்பர்களும் அனுபவித்த சோகங்களை, வலிகளை, விபரித்துச் செல்கின்றது. மரணத்திற்கும் வாழ்வக்கும் இடையில் நடக்கும் மனப்போராட்டம்தான் கதையின் மையமாகவுள்ளது.