சு.செல்லத்துரை, கோகிலா மகேந்திரன், ராஜி கெங்காதரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
viii, 124 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-51144-4-8.
தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், கலை இலக்கியத்துறைகளில் உயர்தர இரசனையைப் பேணுதல், தமிழ் மொழி, இலக்கியம் என்பவற்றின் ஆக்கத்திற்காக உழைத்தல் ஆகியவற்றைத் தனது முதல் நிலை இலக்குகளாகக் கொண்டு இயங்கிவருகின்றது. 17.7.1988இல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் சிறுகதை நாள் என்ற நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் சிறுகதைப் பயிற்சிப் பட்டறைகளை காலத்திற்குக் காலம் இவ்வமைப்பு ஒழுங்குசெய்து வந்துள்ளது. 2014இல் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் 30.3.2014இலும், இணுவில் மத்திய கல்லூரியில் 13.9.2014, 4.10.2014 ஆகிய இரு நாட்களிலும் இப்பட்டறைகளை ஒழுங்குசெய்திருந்தனர். சிறுகதைப் பட்டறைகளில் வழங்கப்பட்ட கருத்துரைக் கட்டுரைகள் சிறுகதையின் உருவம், ஈழத்துச் சிறுகதையின் உள்ளடக்கம், சிறுகதையில் மொழிநடை, சிறுகதை ஆக்கக் கொள்கைகள் ஆகிய தலைப்புக்களில் இந்நூலின் ஆரம்பப் பகுதியில் காணப்படுகின்றன. பட்டறையில் பங்குகொண்டவர்கள் அதன் பயனாக ஏற்பட்ட மனவெழுச்சிகொண்டு எழுதிய தரமான சிறுகதைகள் சிலவும், கலை இலக்கியக்களம் தனது வெள்ளிவிழாவை ஒட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் திறந்த பிரிவில் பரிசுபெற்ற சிறுகதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில் இந்நூலில், பிறழும் நெறிகள், அரும்பு, எண்டாலும் எனக்குப் பயம், சொத்து, எப்ப எங்கடை ஊருக்குப் போவம், உறுதி இலக்கம் 1919, எப்ப வருமோ?, நல்லதோர் வீணை, அவனுடைய அவள், கறுத்தக் கொழும்பான் ஆகிய பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.