நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). வவுனியா: நா.வை.குமரிவேந்தன், 285/1, பிள்ளையார் கோவில் வீதி, உக்கிளாங்குளம், 1வது பதிப்பு, 2010. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம்).
(23), 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கருத்துச் செறிவு மிக்க ஆறு கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியது. கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளரான இந்நூலாசிரியரின் நேர்காணல், தமிழர் திருமண நிகழ்வுக் காரண முறைகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். பெய்யெனப் பெய்யும் மழை என்ற தலைப்புக் கட்டுரையில் அத்தலைப்பிலான குறளின் அடியை எடுத்தாண்டு அதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துகின்றார். தெய்வம் என்பது தமிழியற் சான்றோரையே திருக்குறளில் குறிக்கப்படுகின்றது எனவும் தொழுதல் என்பது போற்றி மதித்தல் எனப் பொருள்படும் என்றும் கூறி திருமணத்தின்போது பெற்றோரும் உறவினரும் பெரியோரும் இல்லறம் ஏற்கும் தலைவன் தலைவிக்குக் கற்பிக்கும் வாழ்வியல் நெறிகளின்படி வாழ்தலே கற்பு வாழ்க்கை என்று கூறுகிறார். ஒருவன் ஒருத்தி என்ற முறைமை வழுவாது மன நிறைவுடன் வாழ்தலே நிறை என்றும் கற்பு நிறை என்பன ஒரே பொருளைக் கொண்டவையே என்றும் நுட்பமாக விளக்குதல் சிறப்பாகும். ஆசிரியர் திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கு முறையை தமிழர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். இந்நூல் தொல்காப்பியர், கௌதமபுத்தர், திருவள்ளுவர், இயேசு கிறீஸ்து, இளங்கோவடிகள், சோக்கிரடீஸ், சுவாமி விவேகானந்தர் போன்றோரின் சிந்தனைகளை எடுத்தாண்டு எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50711).