ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.கைலாஸநாதக் குருக்கள் ஞாபகார்த்த சபை வெளியீடு, ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாஸநாத சுவாமி தேவஸ்தானம், சிவன்கோவில், நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
xii, 36 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20.5×15 சமீ.
திருமுருகாற்றுப்படை அரசு, வாகீசகலாநிதி, திருநெறித் தவமணி, செந்தமிழ்ச்செல்வர், உபந்நியாச சக்கரவர்த்தி என்னும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றிருந்தவர் ‘கலைமகள்’ பத்திரிகாசிரியர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். கி.வா.ஜ., இலங்கைப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்களுடன் நீண்டகால நட்பினைப் பேணிவந்தவர். 1960-70 காலகட்டத்தில் அவர் பேராசிரியருக்கு எழுதிய இலக்கியச் செழுமைமிக்க கடிதங்களின் தொகுப்பு இதுவாகும். ஒருபக்க உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும் இக்கடிதங்கள் கவிதைச் சிறப்புமிக்கன. இக்கடித இலக்கியங்களினூடு கி.வா.ஜ அவர்களின் கவிதாசக்தி, புலமைத்துவம், இரு நண்பர்களுக்கிடையேயான நட்பின் ஆழம், அன்பு, கைலாசநாதக் குருக்களினது புலமைத்துவம் பற்றிய செய்திகள், அவர் அம்பிகைமீது கொண்டிருந்த அளவிலாப் பக்தியின் சிறப்பு, அது போலவே, கி.வா.ஜ அவர்கள் முருகப்பெருமான் மீது கொண்டிருந்த பக்திச் சிறப்பு, குருக்களுடைய பாரியாரின் விருந்தோம்பற் பண்பு, உணவுவகைகள், யாழ்ப்பாண மக்கள்மீது கி.வா.ஜ. கொண்டிருந்த அன்பு, மரியாதை என்பன சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217390).