இராஜகுமாரன் (இயற்பெயர்: இரா.பத்மநாதன்). கொழும்பு 7: இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 13: குளோபல் பிரின்டர்ஸ், 195, ஆட்டுப்பட்டித்தெரு).
xvii, 612 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ.
தினமுரசு பத்திரிகையில் தொடராக எழுதப்பட்ட இராமாயண காவியத்தின் எளிய கதைவடிவம் இதுவாகும். பல நூறறாண்டுகளாக இராமாயண காவியம் பாரத மக்களின் உள்ளார்ந்த இயல்புகளுடன் ஊடுருவி வந்துள்ளது. இராமனையும் சீதையையும் அனுமனையும் தெய்வ புருஷர்களாகவும் இராவணனை ஒரு சிறந்த பண்புகள் கொண்ட வீரம்பொருந்திய ஒரு மன்னனாகவும் இராமாயணம் சித்திரிக்கின்றது. மாற்றான் மனையாளை விரும்பியதால் ஒருவன் கண்ட அழிவினை இராமாயணம் சித்திரிக்கின்றது. மூதறிஞர் ராஜாஜி இக்காவியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘சக்கரவர்த்தித் திருமகன்” என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதியிருந்தார். கோதண்டம் ஏந்திய கோமகன் இராமாயணத்தை கட்டுரை வடிவில் எமக்கு விளக்குகின்றது. எழுத்தாளராகவும் கலைஞராகவும் அரசியல்வாதியாகவும் அறியப்பெற்ற இரா.பத்மநாதன், ஆங்கில உதவி ஆசிரியராகத் தன் பணியை ஆரம்பித்தவர். வீரகேசரி நாளிதழின் ஸ்தாபகர் பி.பி.ஆர்.சுப்பிரமணியம் செட்டியாரின் அந்தரங்கச் செயலாளராக இருந்தவர். தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்பது மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வனுபவங்களை எழுத்தில் வடித்தவர். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதியவர். சுதந்திரன் வார இதழில் துணை ஆசிரியராகக் கடமை புரிந்தவர். அமெரிக்கத் தகவல் நிலையத் தமிழ்ப் பிரிவின் தலைவராகவும் இருந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், சென்னையில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக உளவள ஆற்றுப்படுத்தல் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும்; கடமையாற்றியவர். ஆல் இந்தியா ரேடியோவின் பகுதி நேரச் செய்தியாளராகவும் சென்னையில் பணியாற்றியவர்.