கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
viii, 96 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-2258-5.
சிங்கள இலக்கியப்பரப்பில் எண்பதுகளில் பிரகாசித்த குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களில் கமல் பெரேராவும் ஒருவர். மனித வாழ்வையும் அவர்களுக்கிடையேயான மென்மையான உறவையும் உண்மையான அன்புடனும் கௌரவத்துடனும் இனபேதமற்ற வகையில்அவதானிக்கின்ற தன்மை இவரது கதைகளிலே மேலோங்கி இருக்கின்ற சிறப்பம்சமாகும். விலகல் (1985இல் வெளியான விடியாத இரவுகள் என்ற முதல் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சிறுகதை), நெருப்பின் கண்ணீர் (கறுப்பு ஜுலை இனக்கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டது. 1992இல் வெளியான விலகிச் செல்லல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. தேசிய மட்டப் போட்டியொன்றில் முதற்பரிசு பெற்ற கதை இது.), புயல் (1988-89 தென்னிலங்கை பயங்கரவாதக் காலப்பகுதியில் ராணுவ வீரனொருவனின் செயற்பாடுகளைப் பகைப்புலமாகக் கொண்ட கதை. 1993இல் வெளியான முக்கோணமும் ஏனைய கதைகளும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.), முக்கோணம் (கிளர்ச்சி நடவடிக்கைகளின்போது காணாமல்போன ஓர் இளைஞனையும் அவனது தாயையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதை. முக்கோணமும் ஏனைய கதைகளும் என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது), ராஜினி வந்து சென்றாள் (2003ல் வெளியான ராஜினி வந்து சென்றாள் தொகுப்பின் தலைப்புக்கதை இது. தோதென்ன தமிழில் வெளிக்கொணர்ந்த சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றது), பிரதிவாதி (தெற்கின் கிளர்ச்சிக்கால நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் இன்னொரு கதை. ராஜினி வந்து போனாள் என்ற தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கபப்பட்டது), திறந்த கதவு (சிங்களதமிழ் இன நல்லுறவினை வலியுறுத்தும் கதை. 2009இல் வெளியான தோல்வியுற்ற ராஜ்யம் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டது.) ஆகிய சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.